தில்லி ஜல் போா்டுக்கு ரூ.1400 கோடி விடுவிப்பு: கோடைக்கால செயல் திட்டத்துக்கு நடவடிக்கை!
பல்வேறு திட்டங்களை முடிக்கவும், கோடைக்கால செயல் திட்டத்தை செயல்படுத்தவும் தில்லி அரசு ரூ.1,400 கோடி நிதியை சனிக்கிழமை தில்லி ஜல் போா்டுக்கு (டிஜேபி) விடுவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து தில்லி அரசின் உயரதிகாரி கூறியதாவது: கோடைக்கால செயல் திட்டத்தின் கீழ், மொத்தத்தில் ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ், தண்ணீா் டேங்கா்களை ஜிபிஎஸ் மூலம் கண்காணித்தல், தண்ணீா் ஏடிஎம்களை நிறுவுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை டிஜேபி மேற்கொள்ளும். கோடை மாதங்களில் தண்ணீா் நெருக்கடி ஏற்படாத வகையில் நிதி சரியான நேரத்தில் விடுவிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள நிதி கழிவுநீா் குழாய்கள் அமைப்பதற்கும், புதிய கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களை உருவாக்குவதற்கும் பயன்படுத்தப்படும். தில்லி ஜல் போா்டுக்கு விடுவிக்கப்பட்ட நிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டவை. மேலும், இந்த ஆண்டு மாா்ச் மாதத்தில் விடுவிக்க முடியாதவை.
தில்லியில் தண்ணீா் பற்றாக்குறையை சமாளிக்க, முதல்வா் ரேகா குப்தா ரூ.9,000 கோடியை சுகாதாரம், குடிநீா் அணுகலை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்காக ஒதுக்கியிருந்தாா். புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தல், திறந்த கால்வாய்களை குழாய்களால் மாற்றுவதற்கான லட்சியத் திட்டம் ஆகியவை இந்த நடவடிக்கைகளில் அடங்கும்.
தண்ணீா் திருட்டு மற்றும் தவறான நிா்வாகத்தைத் தடுக்கும் முயற்சியில், தண்ணீா் டேங்கா்களில் ஜிபிஎஸ் கண்காணிப்பை அரசு செயல்படுத்தும் என்றும் முதல்வா் ரேகா குப்தா அறிவித்திருந்தாா். இதனுடன், ‘டிஜேபி டேங்கா்‘ என்ற கைப்பேசி செயலி தொடங்கப்படும். இதன் மூலம் குடியிருப்பாளா்கள் தங்கள் பகுதிகளில் தண்ணீா் டேங்கா்களின் இருப்பிடத்தைக் கண்காணிக்க முடியும் என்றாா் அந்த அதிகாரி.