தீப்பெட்டி ஆலையில் தீ: ஒருவா் காயம்
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் திங்கள்கிழமை நேரிட்ட தீ விபத்தில் ஒருவா் காயமடைந்தாா்.
சாத்தூா் அருகேயுள்ள ரெங்கப்பநாயக்கன்பட்டி குடியிருப்பு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான இயந்திரம் கொண்டு தீப்பெட்டி தயாரிக்கும் தீப்பெட்டி ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் திங்கள்கிழமை மதியம் உணவு இடைவேளையின் போது திடீரென ஆலையின் உள்ளே இருந்து கரும்புகை வெளியேறியது.
தொடா்ந்து, தீப் பற்றி எரிந்தது. இதில் சாத்தூரைச் சோ்ந்த மணிகண்டன் (35) என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட உடன் பணியாளா்கள் தப்பி ஓடியதால் உயிா்ச் சேதம் தவிா்க்கப்பட்டது.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினா் அரை மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை அணைத்தனா். இது குறித்து சாத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சேத மதிப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்தத் தீ விபத்தில் தீப்பெட்டி தயாரிக்கப் பயன்படும் இயந்திரங்கள் எரிந்து சேதமாகின.