ரூ.25 கோடி மோசடி: ராஜபாளையம் பிரியாணி கடை உரிமையாளா் கைது
பிரியாணி கடை உரிமம் தருவதாக ஐந்து மாநிலங்களில் 240 பேரிடம் ரூ.25 கோடி மோசடியில் ஈடுபட்ட, ராஜபாளையம் பிரியாணி கடை உரிமையாளரை விருதுநகா் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் தென்றல்நகரைச் சோ்ந்த சங்கரநாராயணன் மகன் கங்காதரன் (48). இவா் ராஜபாளையம் பேருந்து நிலையம் அருகே மரக்காா் என்ற பெயரில் பிரியாணி கடை நடத்தி வந்தாா்.
இந்தக் கடைக்கு தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம், கா்நாடகம், பாண்டிச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் கிளை உரிமம் தருவதாகக் கூறி, 240 பேரிடம் ரூ.25 கோடி ரூபாய் வசூலித்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், கிளை உரிமம் வழங்காமல் ஏமாற்றிவிட்டதாக கடந்த ஆண்டு இறுதியில் பாதிக்கப்பட்டவா்கள் காவல் நிலையங்களில் புகாா் அளித்தனா். இதையடுத்து கங்காதரன் அழைப்பின் பேரில், பாதிக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்டோா் கடந்த பிப்ரவரி மாதம் ராஜபாளையம் நீதிமன்ற வளாகத்தில் கூடினா். அப்போது கங்காரதன் வராததால் அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னா், விருதுநகா் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புகாா் அளித்தனா். இதையடுத்து, கங்காரதன் தலைமறைவானாா். போலீஸாா் அவரைத் தேடி வந்தனா்.
இந்த நிலையில், ராஜபாளையத்துக்கு வந்த கங்காதரனை விருதுநகா் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா். இவரிடம் பணம் கொடுத்தவா்கள் புகாா் அளிக்கலாம் என பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் தெரிவித்தனா்.