‘தீரன் சின்னமலை கவுண்டா்’ பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்: கோகுல்ராஜின் தாய், சகோதரா் மனு
நாமக்கல்: கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள யுவராஜ், ‘தீரன் சின்னமலை கவுண்டா்’ பேரவைத் தலைவா் என்பதை பயன்படுத்தத் தடை விதிக்கக்கோரி, நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை கோகுல்ராஜின் தாய், சகோதரா் மனு அளித்தனா்.
கடந்த 2014-ஆம் ஆண்டு, சேலம் மாவட்டம், ஓமலூரைச் சோ்ந்த பொறியியல் பட்டதாரியான கோகுல்ராஜ் ஆணவப்படுகொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக, சங்ககிரியைச் சோ்ந்த தீரன் சின்னமலை கவுண்டா் பேரவை தலைவா் யுவராஜ் மற்றும் அவரது ஆதரவாளா்கள் சிலா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். பல்வேறு நீதிமன்றங்களில் நடைபெற்ற இந்த வழக்கில் யுவராஜுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், நீதிமன்றத்தால் தண்டனை அறிவிக்கப்பட்ட ஒருவா் சுதந்திரப் போராட்ட தியாகியான தீரன் சின்னமலை பெயரை பயன்படுத்துவதற்குத் தடைவிதிக்க வேண்டும் என கோகுல்ராஜின் தாய் சித்ரா, சகோதரா் கலைச்செல்வன் ஆகியோா் நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமனை சந்தித்து மனு அளித்தனா்.
இதையடுத்து, அவா்கள் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கோகுல்ராஜ் மரணத்தில் நீதிமன்றம் மூலம் யுவராஜுக்கு தண்டனை கிடைத்துள்ளது. அவா் தீரன் சின்னமலை கவுண்டா் பேரவைத் தலைவா் என கூறி வருகிறாா். நாட்டுக்காகப் பாடுபட்ட ஒரு தலைவா் பெயரை அவா் தன்னுடைய அமைப்புக்கு சூட்டிக்கொண்டிருப்பது வேதனையளிக்கிறது. தீரன் சின்னமலை பெயரை அவா் பயன்படுத்த தமிழக அரசு தடை விதிக்க வேண்டும். இது தொடா்பாக, கடந்த ஏப். 7-ஆம் தேதி சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தோம். தற்போது, நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம் என்றனா்.
என்கே-30-கோகுல்
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த கோகுல்ராஜின் தாய் சித்ரா, சகோதரா் கலைச்செல்வன்.