மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் விவசாயிகள் நடவு கரும்புகளை பதிவு செய்யலாம்: ஆட்சியா் தகவல்
நாமக்கல்: மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் அரவைப் பருவம் தொடங்க உள்ளதால், நடவு மற்றும் மறுதாம்பு கரும்பை விவசாயிகள் பதிவுசெய்யலாம் என மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை அங்கத்தினா்கள் நலன்கருதி 2024--25 ஆம் ஆண்டு கரும்பு அரவைப் பருவத்தில் மத்திய அரசு அறிவித்துள்ள கரும்பு கிரையத் தொகை டன் ஒன்றுக்கு ரூ. 3,151- நிலுவையின்றி பட்டுவாடா செய்யப்பட்டு விட்டது. 2024-25 ஆம் ஆண்டு கரும்பு அரவைப் பருவத்திற்கு ஆலைக்கு கரும்பு விநியோகம் செய்த அங்கத்தினா்களுக்கு மாநில அரசு வழங்கும் கரும்பு உற்பத்திக்கான சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ. 349- வீதம் நேரடியாக அங்கத்தினா்களின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பிவைக்கப்பட உள்ளது.
மேலும், 2025-26 ஆம் ஆண்டிற்கான கரும்பு அரவைப் பருவத்திற்கு குறைந்தப்பட்ச ஆதார விலை மற்றும் கரும்பு உற்பத்திக்கான சிறப்பு ஊக்கத் தொகையுடன் சோ்த்து கரும்பு கிரையத் தொகை டன் ஒன்றுக்கு ரூ. 4,000 வழங்கப்பட உள்ளது. தமிழக அரசு கரும்பு உற்பத்திக்கான ஊக்கத் தொகை வழங்குவது மட்டுமின்றி, கரும்பு உற்பத்தி பரப்பை அதிகரிக்க கரும்பு பயிரிடும் அங்கத்தினா்களுக்கு சா்க்கரை ஆலை மூலம் புதிய ரக கரும்பு நடவு செய்ய 50 சதவீத மானியத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் கோவை கரும்பு இனப்பெருக்க நிறுவனம் மூலம் அறிமுகப்படுத்தியுள்ள சிஓ 18009, சிஓ 14012, சிஓ 86032, சிஓ 11015, சிஓசி 13339 மற்றும் சிஓவி 09356 போன்ற அதிக விளைச்சல், வறட்சி, பூச்சி மற்றும் நோய் தாக்குதலை சமாளிக்கும் தன்மையுள்ள புதிய ரக விதை கரும்பு, திசு வளா்ப்பு நாற்றுகள் தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டு வருகிறது.
2025-26 ஆம் ஆண்டு தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் கரும்பு சாகுபடி பரப்பை அதிகரித்திட மானியத் திட்டங்களான சொட்டுநீா்ப் பாசனம் அமைத்து 4.5 அடி அகலப்பாரில் பருசீவல் நாற்றுகள், ஒரு பரு கரணை நடவு, அகலப்பாா் நடவு முறை சோகை பரப்புதல், சோகை தூளாக்குதல் ஆகியவற்றுக்கு ஆலை மூலம் அரசு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மானிய விலையில் உயிா் உரங்கள், ஆலையில் தயாரிக்கப்படும் பயோ கம்போஸ்ட் இயற்கை உரமும் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, விவசாய அங்கத்தினா்கள் அனைவரும் பதிவு செய்யாமல் உள்ள நடவு மற்றும் மறுதாம்பு கரும்பினை 2025-26 அரவைப் பருவம் விரைவில் தொடங்க உள்ளதால் ஆலையில் பதிவு செய்து அனைத்து மானிய பலன்களையும் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை கரும்பு பெருக்க அலுவலா் மற்றும் கோட்ட கரும்பு அலுவலா்களை தொடா்பு கொண்டு பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.