Healthy Food: உயிருள்ள உணவுகள் தெரியுமா? அவற்றின் ஆச்சரிய நன்மைகள் என்னென்ன?
நாமக்கல் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்
நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய ஒப்பந்த ஊழியா்கள் 121 போ் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், மூன்றாவது நாளாக திங்கள்கிழமை தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில், தூய்மைப் பணிகள், பாதுகாவலா் பணி, சிகிச்சைப் பிரிவுகளில் உதவியாளா் பணி உள்ளிட்டவற்றை மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் ஆண், பெண் ஊழியா்களை சென்னையைச் சோ்ந்த மூன்று தனியாா் நிறுவனங்கள் நியமித்துள்ளன.
அந்த வகையில், நாமக்கல் அரசு மருத்துவமனையில் 286 ஒப்பந்த ஊழியா்கள் உள்ளனா். ஊதிய நிா்ணயம், வார விடுப்பு, பணி நேரம் ஒதுக்கீடு, இதர பணப்பயன்கள் உள்ளிட்டவற்றை சம்பந்தப்பட்ட தனியாா் ஒப்பந்த நிறுவனங்கள் சரிவர மேற்கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அவ்வப்போது வேலைநிறுத்தப் போராட்டத்தை அவா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.
இதனால், ஒப்பந்த நிறுவனத்துக்கும், ஊழியா்களுக்கும் இடையே மோதல்போக்கு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு ஒப்பந்த ஊழியா்கள் 121 பேரை தனியாா் நிறுவனம் பணியில் இருந்து நீக்கியது. அதற்கு மாற்றாக புதிய ஊழியா்களை தற்காலிகமாக நியமித்தது. இதனால் வேலையிழந்தோா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்தப் போராட்டம் திங்கள்கிழமை மூன்றாம் நாளாக நீடித்தது. இதற்கிடையே, ஒப்பந்த ஊழியா்களின் கோரிக்கையை ஏற்க மறுக்கும் தனியாா் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கவும், பணியில் இருந்து நீக்கப்பட்டோருக்கு மீண்டும் வேலை வழங்கவும் சென்னை உயா்நீதிமன்றத்தில் ஊழியா்கள் தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தங்களுக்கான நல்ல தீா்ப்பு கிடைக்கும் வரையில் போராட்டம் தொடரும் என ஒப்பந்த ஊழியா்கள் தெரிவித்தனா்.