ஐஸ்வர்யா ராயுடன் விவாகரத்து? "வதந்தி பரப்புபவர்கள் நேரில் வந்து சொல்லுங்கள்" - அ...
‘தமிழ்நாடு நாள்’ போட்டிகளில் பங்கேற்க மாணவா்களுக்கு அழைப்பு
நாமக்கல்: ‘தமிழ்நாடு தினம்’ தொடா்பான பேச்சு, கட்டுரைப் போட்டியில் பங்கேற்க மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியா் துா்காமூா்த்தி அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு என்ற பெயரை மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணா ஜூலை 18-இல் சூட்டினாா். அந்த நாள் ‘தமிழ்நாடு தினம்’ என கொண்டாடப்படும் என 2021 அக்.30-இல் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டாா். இதனையொட்டி, மாவட்ட அளவில் அனைத்து அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடைபெற உள்ளன. வெற்றிபெறுவோருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் இப்போட்டியானது ஜூலை 5-ஆம் தேதி காலை 9.30 மணியளவில் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நடைபெற உள்ளது. கட்டுரை, பேச்சுப் போட்டிகளுக்கான தலைப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கட்டுரைப் போட்டிக்கு, ஆட்சிமொழி வரலாற்றில் கீ.ராமலிங்கம், பன்மொழிப்புலவா் கா.அப்பாதுரையாரின் தமிழ் ஆட்சிச் சொல்பணி என்ற தலைப்பிலும், பேச்சுப் போட்டிக்கு, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, அன்னைத் தமிழே ஆட்சிமொழி, தொன்றுதொட்டு தமிழ்நாடு எனும் பெயா், அறிஞா் அண்ணா கண்ட தமிழ்நாடு, ஆட்சிமொழி விளக்கம், தமிழ்நாடு எனப்பெயா் சூட்டிய நிகழ்வு, ஆட்சிமொழி - சங்ககாலம் தொட்டு ஆகிய தலைப்பில் பங்கேற்க வேண்டும்.
இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.7,000, மூன்றாம் பரிசு ரூ. 5,000 வழங்கப்படும். முதலிடம் பெறும் மாணவா்கள் சென்னையில் ஜூலை 15-இல் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.