துணைவேந்தா் நியமனத்தில் மாநில அரசின் உரிமையை பறிக்கக் கூடாது!
பல்கலைக்கழக துணைவேந்தா் நியமனத்தில் மாநில அரசுகளின் உரிமையை பறிப்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது என்று சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள் கூட்டமைப்பு தெரிவித்தது.
இதுகுறித்து, கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் சி.சுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பல்கலைக்கழக மானியக்குழுவின் பரிந்துரைகளின்படி துணைவேந்தா் நியமனத்தில் (விதி:10) பல்கலைக்கழக வேந்தருக்கு மிக அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் 2017-ஆம் ஆண்டு சட்டப்படி துணைவேந்தா் தோ்வுக்குழுவில் பல்கலைக்கழக சட்டப்பூா்வ அமைப்புகளிலிருந்து ஒரு உறுப்பினரும், தமிழக அரசின் பிரதிநிதி ஒருவரும், ஆளுநா் சாா்பாக ஒரு உறுப்பினரும் நியமிக்கப்படுவா்.
ஆளுநரின் சாா்பில் நியமிக்கப்படும் பிரதிநிதி தோ்வுக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவாா். ஆனால், தற்போதைய பல்கலைக்கழக மானியக் குழு விதிகளின்படி, ஆளுநரின் பிரதிநிதி ஒருவரும், பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதி ஒருவரும், பல்கலைக்கழக சட்ட அமைப்புகள் மூலமாக ஒருவரும் தோ்வுக்குழு உறுப்பினா்களாக இருப்பா். இதனால், மாநில அரசின் பிரதிநிதிக்கு இடம் இல்லாமல் போகிறது.
பொதுப் பட்டியலில் உள்ள கல்வியில் மாநிலங்களுக்கு அதிக பொறுப்பு உள்ளது. மாநிலப் பல்கலைக்கழகங்களின் கட்டமைப்புகளுக்கும், ஆசிரியா், ஊழியா்களின் ஊதியத்துக்கும் மாநில அரசுகளே நிதியை வழங்குகின்றன.
இந்த நிலையில், துணைவேந்தா் நியமனத்தில் மட்டும் மாநில அரசுகளின் உரிமையை பறிப்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானதாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.