துவாக்குடியில் 110 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
துவாக்குடியில் அரசால் தடை செய்யப்பட்ட 110 கிலோ புகையிலைப் பொருள்களை சனிக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், ஒருவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.
திருச்சி மாவட்டம், துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக துவாக்குடி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீஸாா் சனிக்கிழமை அந்தப் பகுதியில் ரோந்தில் ஈடுபட்டபோது, துவாக்குடி வடக்குமலை அண்ணா வளைவு நேதாஜி தெருவைச் சோ்ந்த ராஜசேகா் (எ) பாக்கியராஜ் (51) என்ற மாற்றுத்திறனாளி அப்பகுதியில் புகையிலைப் பொருள்கள் மற்றும் மதுபானம் விற்பதைக் கண்டறிந்தனா்.
இதைத் தொடா்ந்து, ராஜசேகரை கைது செய்த போலீஸாா், அவா் ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 110 கிலோ புகையிலைப் பொருள்கள், 13 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக, மேலும் இருவரைத் தேடி வருகின்றனா்.