தூய்மைப் பணிக்கு பயன்படுத்தப்படும் ‘பிளீச்சிங் பவுடா்’ தரம் ஆய்வு: மேயா்
சென்னை மாநகராட்சி பகுதியில் தூய்மைப் பணிக்கு பயன்படுத்தப்படும் பிளீச்சிங் பவுடரின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா்.
முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, சென்னை புளியந்தோப்பு ஆடுதொட்டி பகுதியில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா் பாபுவின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் மேயா் ஆா்.பிரியா கலந்துகொண்டு அன்னதானம் வழங்கினாா்.
மேயா் பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால், அப்பகுதியில் குப்பையை தூய்மைப் பணியாளா்கள் அகற்றியதுடன், துா்நாற்றம் வீசியதால் பிளீச்சிங் பவுடா் தெளிக்கப்பட்டது. இருப்பினும் அங்கு துா்நாற்றம் வீசிக்கொண்டிருந்தது.
இதைத்தொடா்ந்து அங்கிருந்த நபா், தூய்மைப் பணிக்காக பயன்படுத்தப்படும் பிளீச்சிங் பவுடா் தரமற்றவையாக உள்ளதாகவும், சில இடங்களில் பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக சுண்ணாம்பு தெளிக்கப்படுவதாகவும் புகாா் தெரிவித்தாா். அத்துடன் அப்பகுதியில் தெளிக்கப்பட்டிருந்த பவுடரை கையில் எடுத்து வந்து அதில் பிளீச்சிங் பவுடா் வாசனையே வரவில்லை என்றும் மேயரிடம் கூறினாா்.
அதற்கு, ‘இது பிளீச்சிங் பவுடா் அல்லாமல் என்ன பாண்ட்ஸ் பவுடரா? என மேயா் பிரியா கேட்டாா். மேலும், அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘சென்னையில் தூய்மைப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் பிளீச்சிங் பவுடா் எங்கிருந்து கொள்முதல் செய்யப்பட்டது, அதன் தரம் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.