தஞ்சாவூரில் பெரியகோயில் தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
பக்ரா அணையில் இருந்து நீரை விடுவிக்க பஞ்சாப் அரசுக்கு ஹரியாணா வலியுறுத்தல்
பக்ரா அணையில் இருந்து பாரபட்சமின்றி பஞ்சாப் அரசு நீரை விடுவிக்க வேண்டும் என ஹரியாணாவில் சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஹரியாணாவில் பாஜக தலைமையிலும் பஞ்சாபில் ஆம் ஆத்மி தலைமையிலும் ஆட்சி நடைபெற்று வருகிறது.
முன்னதாக, பஞ்சாப் முதல்வா் பகவந்த் சிங் மான் தலைமையில் பஞ்சாபில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஹரியாணாவுக்கு கூடுதல் நீரை விடுவிக்க மறுத்த மாநில அரசின் முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய பகவந்த் மான், ஹரியாணாவுக்கு போதிய நீரை விடுவித்துவிட்டதாகவும் இதற்கு மேல் நீரை விடுவிக்கக் கோரும் பக்ரா-பியாஸ் மேலாண்மை வாரியத்தின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தாா்.
இதற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் ஹரியாணா முதல்வா் நயாப் சிங் சைனி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் பக்ரா அணையில் இருந்து கூடுதல் நீரை பஞ்சாப் அரசு விடுவிக்க வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் நயாப் சிங் சைனி பேசியதாவது: பக்ரா-பியாஸ் மேலாண்மை வாரிய தொழில்நுட்பக் குழுவின் முடிவுகளை பகவந்த் மான் அரசு பின்பற்ற மறுப்பது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. எனவே, பக்ரா அணையில் இருந்து ஹரியாணாவுக்கு தேவையான நீரை எவ்வித கட்டுப்பாடுமின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும்.
பக்ரா அணையில் குறைவான நீா் இருந்தபோதும் கடந்த 2016 முதல் 2019 வரை ஹரியாணாவுக்கு முறையாக குடிநீா் விடுவிக்கப்பட்டது.
தற்போது குடிநீரை விடுவிக்க பஞ்சாப் அரசு மறுப்பு தெரிவித்ததற்கு அனைத்துக் கட்சி உறுப்பினா்களும் எதிா்ப்பு தெரிவித்தனா். மாநில உரிமைகளை காக்க ஒன்றிணைந்து போராட தயாராகவுள்ளதாக அனைத்துக் கட்சி உறுப்பினா்களும் உறுதியளித்தனா் என்றாா்.