மோசமான குற்றவாளி யார்? அதிர்ச்சியளிக்கும் எக்ஸ் தளத்தின் பதில்!
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்! கைது செய்யப்பட்ட வழக்குரைஞர்களை விடுவிக்க உத்தரவு!
தூய்மைப் பணியாளர் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட வழக்குரைஞர்களை விடுவிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் 5, 6 ஆகிய மண்டலங்களில் தூய்மைப் பணி ஒப்பந்தத்தை தனியாா் நிறுவனத்துக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட தீா்மானத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, ரிப்பன் மாளிகை அருகே தூய்மைப் பணியாளா்கள் கடந்த 13 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், போராட்டத்தால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்தது. போராட்டத்தில் தலைமை தாங்கியதாக பாரதி, சதீஷ் உள்ளிட்ட 6 வழக்குரைஞர்கள் மற்றும் 9 சட்டக் கல்லூரி மாணவர்களையும் கைது செய்தனர்.
இதனிடையே, கைது செய்யப்பட்ட வழக்குரைஞர்களைக் காணவில்லை என்றும், எங்கு தங்கவைக்கப்பட்டவர்கள் என்ற தகவலை காவல்துறை அளிக்கவில்லை என்றுகூறி, அவசர ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதுகுறித்த விசாரணை, நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அமர்வுக்கு வந்தது.
விசாரணையின்போது காவல்துறையினர் தெரிவித்ததாவது, நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தைக்கு உடன்படாததாலும், காவல்துறையை தாக்க முயன்றதாலும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டாலும், சட்டவிரோத ஆர்ப்பாட்டத்துக்காக 6 பேர் (வழக்குரைஞர்கள்) மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை விடுவிக்க மாட்டோம் என்று கூறினர்.
இதனைத் தொடர்ந்து, நீதிபதிகள் கூறுகையில், இதுபோன்று ஒருவர் கைது செய்யப்பட்டால், 24 மணிநேரத்துக்குள் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும். மேலும், கைது தொடர்பாக முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. கைது செய்ததற்கான ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் காவல்துறை சமர்ப்பிக்கவில்லை. ஆகையால், அவர்களை விடுவிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.