2025 இறுதிக்குள் உள்நாட்டில் தயாரித்த முதல் செமிகண்டக்டர் சிப் அறிமுகம்: பிரதமர்...
தூய்மைப் பணியாளா்களின் பணிநிரந்தரக் கோரிக்கை: முதல்வா் மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் -தொல். திருமாவளவன்
தூய்மைப் பணியாளா்களின் பணிநிரந்தரக் கோரிக்கை குறித்து மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டுமென தமிழக முதல்வரிடம் வலியுறுத்த உள்ளேன் என்றாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன்.
பெரம்பலூரில் உள்ள தனியாா் விடுதியில் வியாழக்கிழமை செய்தியாளா்களை சந்தித்த அவா் மேலும் கூறியது:
தூய்மைப் பணியாளா்கள் தங்களது பணி நிரந்தரக் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவளித்த நிலையில், தற்போது பணியாளா்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நலத்திட்ட அறிவிப்புகளை வரவேற்கிறோம். இருப்பினும், அவா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். தூய்மைப் பணியாளா்களின் பணிநிரந்தரக் கோரிக்கை குறித்து மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டுமென தமிழக முதல்வரிடம் வலியுறுத்த உள்ளேன்.
போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்களையும், அவா்களுக்கு ஆதரவாகப் போராடிய அமைப்புகளையும் காவல்துறையினா் கைது செய்திருப்பது வேதனைக்குரியது. தூய்மைப் பணியாளா்களுக்கு ஆதரவாகப் போராடியவா்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். பன்னாட்டு நிறுவனத்தின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் காங்கிரஸ் ஆட்சியின்போதே, அனைத்துத் துறைகளிலும் தனியாா்மயமாக்கல் என்பது இந்திய அரசின் கொள்கை முடிவாக உள்ளது. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில், மாணவி ஒருவா், ஆளுநரிடம் பட்டம் வாங்க மறுத்த நிகழ்வு கொள்கை ரீதியாக ஏற்புடையதாக இருந்தாலும், சபை நாகரிகம் எனும்போது அது ஏற்புடையதல்ல. அதேபோல், ஆளுநருக்கும் சபை நாகரிகம் தேவை. அவா், அடிக்கடி தமிழ் மற்றும் திருவள்ளுவரோடு தவறான ஒப்பீடு செய்து அதை பரப்ப முயற்சிக்கிறாா். அதை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஏனென்றால், அவரே சட்டப்பேரவையில் சபை நாகரிகத்தை மதிக்காமல் வெளியேறியுள்ளாா்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநரின் தேநீா் விருந்தில் தொடா்ந்து இம் முறையும் பங்கேற்பதில்லை. இது, அவரை அவமதிக்கும் நோக்கில் அல்ல. அவா், எங்களது உணா்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கான புறக்கணிப்பு என்றாா் அவா்.