தூய்மைப் பணியாளா்கள் 243 பேருக்கு உபகரணங்கள்: முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்
தூய்மைப் பணியாளா்கள் 243 பேருக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி பாதுகாப்பு உபகரணங்களை வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் மற்றும் தேசிய தூய்மை தொழிலாளா்கள் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் இணைந்து தொடங்கியுள்ள தேசிய இயந்திர மயமாக்கப்பட்ட சுகாதார சுற்றுச்சூழல் நடவடிக்கையான நமஸ்தே திட்டம், கழிவு நீா் மற்றும் செப்டிக் டேங்க் தூய்மை செய்யும் தொழிலாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புதுவை மாநிலத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் 243 தொழிலாளா்கள் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளனா். அவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா். இந்த நிகழ்வின்போது, சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், உள்ளாட்சி துறை இயக்குநா் சக்திவேல், துணை இயக்குநா் சவுந்திரராஜன், உழவா்கரை நகராட்சி ஆணையா் சுரேஷ்ராஜ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.