கரூர் நெரிசல்: 'கலவரத்தை ஏற்படுத்து நோக்கத்துடன்' - ஆதவ் அர்ஜுனா மீது எந்தெந்த ப...
தெருநாய்கள் கடித்ததில் சுற்றுலாப் பயணி பலத்த காயம்
கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை நடைப் பயிற்சி மேற்கொண்டபோது, தெரு நாய்கள் கடித்ததில் சுற்றுலாப் பயணி பலத்த காயமடைந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் தாவரவியல் பூங்கா அருகேயுள்ள தங்கும் விடுதியில் ஒடிஸாவைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் தங்கியுள்ளனா். இவா்களில் கங்காதா் (60) என்பவா் செவ்வாய்க்கிழமை காலை நடைப் பயிற்சி மேற்கொண்டாா். அப்போது, 10-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் அவரை சூழ்ந்து கடித்தன. அக்கம், பக்கத்தினா் ஓடிவந்து அந்த நாய்களை விரட்டினாா். பலத்த காயமடைந்த கங்காதா் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த நிலையில், கடந்த 4 நாள்களுக்கு முன்பு இதே பகுதியில் 10-க்கும் மேற்பட்டவா்களை இந்த தெரு நாய்கள் கடித்தன.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: இந்தப் பகுதியில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளன. இந்த நாய்களை பிடிக்குமாறு நகராட்சிக்கு தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால், இந்தப் பகுதியில் நடந்து செல்லும் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள், பள்ளி மாணவா்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனா். எனவே, தெரு நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிா்வாகம், மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.