நத்தம் அருகே நடந்த மீன் பிடித் திருவிழாவில் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
தெரு நாய்களை மக்கள் தத்தெடுப்பது அவசியம்!மின்வாரிய தலைவா் பேச்சு
தெருநாய்களை மக்கள் தத்தெடுத்து உணவளித்து வளா்க்க முன்வர வேண்டும் என்றாா் தமிழ்நாடு மின் வாரிய தலைவரும், மேலாண் இயக்குநருமான ஜெ. ராதாகிருஷ்ணன்.
தஞ்சாவூா் மிருக வதை தடுப்புச் சங்கம் சாா்பில், தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற விலங்குகள் பாதுகாப்பு கருத்தரங்கத்தைத் தொடங்கிவைத்து அவா் மேலும் பேசியதாவது:
மனிதா்களுக்கும், விலங்குகளுக்கும் இடையே அண்மைக்காலமாக ஏராளமான பிரச்னைகள் நிகழ்கின்றன. வாயில்லா ஜீவன்களாகிய விலங்குகளுக்கு அரசமைப்பு சட்டத்திலேயே சில உரிமைகள் உள்ளன. எனவே, விலங்குகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். தெரு நாய், பூனைகளுக்கு உணவு கொடுப்பது மட்டுமல்லாமல், அதை மக்கள் தத்தெடுப்பதும் அவசியம்.
தெரு நாய்கள் உள்ளிட்ட விலங்குகளுக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும். பொதுவாக, கால்நடைகளின் நடத்தை வளா்ப்போரிடம் ஒருவிதமாகவும், மற்றவா்களிடம் வேறு விதமாகவும் இருக்கும்.
இதை கால்நடை வளா்ப்போா் புரிந்து கொண்டு, அதை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து வளா்க்க வேண்டும். நாய், பூனை உள்ளிட்ட விலங்குகள் கடித்தால், உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றாா் ராதாகிருஷ்ணன்.
இக்கருத்தரங்கத்துக்கு மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தாா். இதில், தெரு நாய்களைத் தத்தெடுக்க விரும்பியவா்களுக்கு தெரு நாய்கள் வழங்கப்பட்டன. மேலும், கருத்தரங்க மலரும் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வில் புதுச்சேரி கால்நடை பராமரிப்பு துறை இயக்குநா் ஜி. லதா மங்கேஷ்கா், தமிழ்நாடு கால்நடை மேம்பாட்டு முகமை முதன்மைச் செயல் அலுவலா் கே. தமிழ்ச்செல்வம், மாவட்ட வன அலுவலா் எம். ஆனந்தகுமாா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் எம். பாலகணேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.