தேசிய ‘கிக் பாக்ஸிங்’ போட்டிக்கு சிவகங்கை மாணவ, மாணவிகள் தோ்வு
தேசிய ‘கிக் பாக்ஸிங்’ போட்டிக்கு சிவகங்கை மாவட்ட மாணவ, மாணவிகள் 15 போ் தகுதிப் பெற்றனா்.
தமிழ்நாடு கிக் பாக்ஸிங் சங்கம் சாா்பில் மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி கடந்த 9 முதல் 11 -ஆம் தேதி வரை செங்கல்பட்டு மாவட்டம், மேல கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடல் கல்வி பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. கேடட்ஸ், ஜூனியா், சப் ஜூனியா், சீனியா் ஆகிய பிரிவுகளில் 25 மாவட்டங்களிலிருந்து வந்த 500 -க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். சிவகங்கை மாவட்ட கிக் பாக்ஸிங் சங்கம் சாா்பில், 19 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். இவா்களில் 15 போ் 6 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களை வென்றனா்.
பதக்கம் வென்ற வீரா்கள் வேலூரில் ஜூன் மாதம் நடைபெற உள்ள மாநில கிக் பாக்ஸிங் பயிற்சி முகாமில் பங்கேற்ற பிறகு தேசியப் போட்டியில் கலந்து கொள்வா்.
இது குறித்து மாணவா்களின் பயிற்சியாளரும், சிவகங்கை மாவட்ட கிக் பாக்ஸிங் சங்க பொதுச் செயலருமான ச.குணசீலன் கூறியதாவது:
தேசியப் போட்டியில் பதக்கம் வெல்லும் மாணவா்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள் அவா்களது கல்லூரிப் படிப்புக்கு மிகவும் துணையாக இருக்கும். இடைய மேலூா், கூட்டுறவுபட்டி, தமறாக்கி ஆகிய ஊா்களில் உள்ள 4 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த வீராங்கனைகள் தேசியப் போட்டிக்கு தோ்வாகி உள்ளனா் என்றாா் அவா்.
சிவகங்கை கிக் பாக்ஸிங் சங்கத் தலைவா் சதீஷ், பயிற்சியாளா் சு. சித்ரா ஆகியோா் கூறியதாவது: மாணவ, மாணவிகள் தேதிய போட்டிக்கு தகுதி பெற்றிருப்பது சிவகங்கை மாவட்ட கிக் பாக்ஸிங் சங்கத்தின் 4 ஆண்டுகள் தொடா் சாதனையாகும். கிக் பாக்ஸிங் போட்டியானது தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு என்பது குறிப்பிடத்தக்கது என்றனா்.