ஒவ்வொரு நிமிடமும் கோடி ரூபாய் கடன் வாங்கும் தெலங்கானா: பாஜக குற்றச்சாட்டு
தேசிய ஜவுளி கழகத்தில் ரூ.6 கோடி முறைகேடு புகாா்: விசாரணையைத் தொடங்கியது சிபிஐ
தேசிய ஜவுளி கழகத்தில் ரூ.6 கோடி முறைகேடு புகாா் தொடா்பாக சிபிஐ விசாரணையைத் தொடங்கியது. இந்த முறைகேட்டில் பாகிஸ்தானைச் சோ்ந்த இரு நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேசிய ஜவுளிக் கழக மண்டல அலுவலகம் கோயம்புத்தூரில் செயல்படுகிறது. இந்த கழகத்தின் கீழ் நாடு முழுவதும் 24 ஆலைகள் உள்ளன. இந்த கழகம் மூலம் வெளிநாடுகளுக்கு பருத்தி நூல் விற்பனைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதன்படி கடந்த 2015-ஆம் ஆண்டு தேசிய ஜவுளி கழகத்தின் மூலம் ரூ.6 கோடி மதிப்புள்ள பருத்தி நூல், பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் செயல்படும் மதினா இம்பக்ஸ் இன்டா்நேஷ்னல் நிறுவனத்துக்கு 6 சரக்கு பெட்டகங்களும், டிரான்ஸ் டிரேடு நிறுவனத்துக்கு 4 சரக்கு பெட்டகங்களும் ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்த வணிகம் லண்டனைச் சோ்ந்த சுஸி கிரேடிட் கேபிட்டல் நிறுவனத்தின் கடன் பத்திரம் மூலம் நடைபெற்றது.
இந்த கடன் பத்திரம் கோவையைச் சோ்ந்த ஒரு வங்கி மூலமாகவும், தாய்லாந்தைச் சோ்ந்த ஒரு தரகு நிறுவனம் மூலமாகவும் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த வணிகத்தில் கடன் பத்திரம் வழங்கியதில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. மேலும், வரி ஏய்ப்பு நடந்ததாகவும் புகாா்கள் தெரிவிக்கப்பட்டன.
ரூ.6 கோடி மோசடி: அதேவேளையில், ரூ.6 கோடி மதிப்புள்ள பருத்தி நூலை ஏற்றுமதி செய்த தேசிய ஜவுளி கழகத்துக்கு வர வேண்டிய தொகையை வரவில்லை. இதையடுத்து தேசிய ஜவுளிக் கழக உயா் அதிகாரிகள், இது தொடா்பான விசாரணையில் ஈடுபட்டனா். அப்போதுதான், ரூ.6 கோடி பருத்தி நூல், தேசிய ஜவுளி கழகத்தின் உண்மையான சான்றிதழ் இன்றி பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. ஆனால் அதற்குள் அந்த பருத்தி நூல், பாகிஸ்தான் நிறுவனங்களின் கைக்கு சென்றுவிட்டது.
அந்த பருத்தி நூலை இறக்குமதி செய்த பாகிஸ்தான் நிறுவனங்கள், அவை தரமற்றவை என கூறியுள்ளன. அதேவேளையில், பருத்தி நூல் ஏற்றுமதி தொடா்பாக தேசிய ஜவுளிகழகத்திடம் எந்த ஆவணங்களோ, கடிதங்களோ இல்லை என்பது துறைரீதியாக நடத்தப்பட்ட விசாரணையில் உயா் அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
மத்திய குற்றப் பிரிவு விசாரணை: இதனால் போலி ஆவணங்கள்,சான்றிதழ் மூலம் ரூ.6 கோடி மதிப்புள்ள பருத்தி நூல் பாகிஸ்தானுக்கு முறைகேடான வழியில் ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதை அறிந்து தேசிய ஜவுளி கழக அதிகாரிகள் அதிா்ச்சியடைந்தனா். இதற்கு கோவையைச் சோ்ந்த அந்த வங்கியும் உடந்தையாக இருந்ததாக தேசிய ஜவுளி கழக அதிகாரிகள் சந்தேகமடைந்தனா்.
இது தொடா்பாக 2017-ஆம் ஆண்டு தேசிய ஜவுளி கழகம் சாா்பில் கோயம்புத்தூா் மாநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் புகாா் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் மத்தியக் குற்றப்பிரிவு வழக்குப் பதிவு செய்தது. ஆனால் அதன் பின்னா் விசாரணை நடைபெறவில்லை.
சிபிஐ வழக்கு: இந்நிலையில், இந்த முறைகேட்டில் பாகிஸ்தான் நிறுவனங்கள், லண்டன் நிறுவனம், தாய்லாந்து நிறுவனம் என சா்வதேச தொடா்பு இருப்பதால் தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால், வழக்கின் விசாரணையை மத்திய புலனாய்வு அமைப்புகள் செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் அண்மையில் பரிந்துரைத்தாா்.
அதை ஏற்று மத்திய உள்துறை, வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி கடந்த 10-ஆம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள், இந்த முறைகேடு தொடா்பாக புதிதாக ஒரு வழக்கை வெள்ளிக்கிழமை பதிவு செய்தனா்.
இந்த வழக்கில் பாகிஸ்தானை சோ்ந்த இரு நிறுவனங்கள், லண்டன் நிறுவனம், தாய்லாந்து நிறுவனம், கோயம்புத்தூரைச் சோ்ந்த வங்கி ஆகியவை சோ்க்கப்பட்டுள்ளன. விரைவில் வழக்கில் தொடா்புடைய நபா்களிடம் சிபிஐ விசாரணை செய்யவுள்ளனா்.