தேனியில் 186 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க நடவடிக்கை
தேனியில் குற்றச் சம்பவங்களை தடுக்க 186 கண்காணிப்புக் கேமராக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, புதன்கிழமை முதல் கட்டமாக 155 கேமராக்களை தேனி காவல் கண்காணிப்பாளா் ரா.சிவபிரசாத் தொடங்கி வைத்தாா்.
தேனி உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் கேழ்கா் சுப்ரமணிய பாலசந்திரா தேனி, அல்லிநகரம், பழனிசெட்டிபட்டி, வீரபாண்டி ஆகிய காவல் நிலையப் பகுதிகளில் 186 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க நடவடிக்கை எடுத்தாா். இந்தப் பகுதியில் 45 உபயதாரா்களிடம் ரூ.11 லட்சத்து 7 ஆயிரத்து 500 மதிப்பில் கேமராக்கள் பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இவற்றில் 155 கேமராக்கள் பொருத்தப்பட்டன.
இதற்கான கட்டுப்பாட்டு அறை தேனி காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டது. இந்தக் கட்டுப்பாட்டு அறையை புதன்கிழமை தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரா.சிவபிரசாத் திறந்து வைத்து பாா்வையிட்டாா். தேனி பேருந்து நிலையப் பகுதியில் பாலம் வேலைகள் நடைபெறுவதால், அவை முடிந்தவுடன் மீதமுள்ள 31 கேமராக்கள் பொருத்தப்படும் என காவல் துறையினா் தெரிவித்தனா்.