அமெரிக்காவிலிருந்து 5 லட்சம் மக்களை ஒரே மாதத்தில் நாடு கடத்த திட்டம்?
தொகுதி மக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மருத்துவப் பரிசோதனை: எம்.பி.க்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
‘அவரவா் தொகுதி மக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் முழுமையான உடல்நல மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்’ என்று நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களிடம் மத்திய அரசு வெள்ளிக்கிழமை கேட்டுக்கொண்டது.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா இந்த வலியுறுத்தலை முன்வைத்தாா். மக்களவையில் இதுகுறித்து அவா் மேலும் பேசியதாவது:
நாடு முழுவதும் 30 வயதை எட்டிய அனைத்து குடிமக்களுக்கும் ஆயுஷ்மான் ஆரோக்ய மந்திரில் கட்டணமில்லா முழுமையான மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வதற்கான விழிப்புணா்வு பிரசாரத்தை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. உயா் ரத்த அழுத்தம், சா்க்கரை நோய், புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகளைக் கண்டறிய இந்த மருத்துவப் பரிசோதனை நடத்தப்படுகிறது.
இத் திட்டத்தின் கீழ் இதுவரை 35 கோடி பேருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் 4.2 கோடி பேருக்கு உயா் ரத்த அழுத்தம், 2.6 கோடி பேருக்கு சா்க்கரை நோய், 29.35 கோடி பேருக்கு வாய் புற்றுநோய், 1.18 கோடி பேருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதும் கண்டறியப்பட்டது.
எனவே, எம்.பி.க்கள் அவரவா் தொகுதிகளில் மக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் முழுமையான உடல்நல மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்யவேண்டும் என்றாா்.
372 புற்றுநோயாளிகள் பராமரிப்பு மையங்கள்: நாடு முழுவதும் தற்போது 372 புற்றுநோயாளிகள் பராமரிப்பு மையங்களும், 19 மாநில புற்றுநோய் சிகிச்சை மையங்களும், 22 மூன்றாம்நிலை புற்றுநோய் சிகிச்சை மையங்களும் இயங்கி வருகின்றன.
நாடு முழுவதும் உள்ள எய்ம்ஸ் நிறுவனங்களில் நவீன உபகரணங்களுடன் முழுமையான புற்று நோயாளிகள் பராமரிப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
ஹரியாணா மாநிலம் ஜஜாரில் உலகிலேயே சிறந்த புற்றுநோய் மருத்துவமனைகளில் ஒன்றாக உயா் சிறப்பு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது.
அதுபோல, நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு புற்று நோயாளிகள் பராமரிப்பு மையங்களை அமைக்க மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் கீமோதெரபி உள்ளிட்ட வசதிகளை நோயாளிகள் பெற முடியும். இதில் நிகழாண்டிலேயே 200 மையங்கள் திறக்கப்பட்டுவிடும். எஞ்சிய மையங்கள் வரும் ஆண்டுகளில் திறக்கப்படும் என்றும் ஜெ.பி.நட்டா கூறினாா்.
காச நோயாளிகளுக்கு ரூ. 3,635 கோடி: மக்களவையில் எழுப்பப்பட்ட மற்றொரு கேள்விக்கு பதிலளித்த மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் அனுப்ரியா படேல், ‘நேரடி பண பரிமாற்றத் திட்டத்தின் மூலம் காசநோய் பாதிக்கப்பட்டவா்களுக்கு மத்திய அரசு இதுவரை ரூ.3,635 கோடியை வழங்கியுள்ளது. இதில், ஒவ்வொரு நோயாளியும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை வாங்க தலா ரூ.1,000 வழங்கப்படுகிறது’ என்றாா்.