செய்திகள் :

தொடங்கியது விகடன் மாணவப் பத்திரிகையாளர் கூட்டுப் பயிற்சி முகாம்!

post image

தமிழ் ஊடக உலகின் பிரதான ஆளுமைகள் பலரின் முதல் படி, விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம். இந்தத் திட்டத்தின் 2025-26-ம் ஆண்டுப் படை தயாராகிவிட்டது.

மாணவர்களுக்கு வழிகாட்டுதலும் பயிற்சியும் வழங்கும் இரண்டு நாள் கூட்டுப் பயிற்சி முகாம் இன்றும் நாளையும் (ஜூலை 26, 27) சென்னையில் நடைபெறுகிறது.

முதல்நாளான இன்று விகடன் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன், மாணவர்களை வரவேற்று வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறார்.

விகடன் மாணவ பத்திரிகையாளர்கள்!

தொடர்ந்து திமுக துணைப் பொதுச் செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி அரசியலும் ஊடகமும் என்ற தலைப்பில் மாணவர்களிடம் உரையாற்றுகிறார்.

தொடர்ந்து திரைப்பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், டிஜிட்டல் யுகத்தில் திரைப்படங்கள் என்ற தலைப்பில் மாணவர்களுடன் உரையாற்றுகிறார்.

புதிய தலைமுறை அரசியல் பிரிவு ஆசிரியர் க.கார்த்திகேயன் இன்றைய ஊடகம் என்ற தலைப்பில் மாணவர்களுடன் உரையாற்றுவதுடன், அனுபவங்களைப் பகிரவிருக்கிறார்.

விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2025-26

சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் மாணவர்களுடன் உரையாற்றுவதுடன், அவர்கள் எழுப்பும் சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளனர். இதேப்போல நாளையும் மாணவர்களுக்கு அனுபவமும் வழிகாட்டுதலும் அளிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கின்றன.

ஒரு கையில் பேனாவும், மறு கையில் ஸ்மார்ட்போனுமாக உற்சாகத்துடன் களமிறங்கியிருக்கிறது புதிய படை. இந்த ஆண்டு, திட்டத்துக்கு விண்ணப்பித்த 2,780 மாணவர்களில் பலகட்டப் பரிசீலனைகளுக்குப் பிறகு 69 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ‘360 டிகிரி’யில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவிருக்கும் இந்த இளைஞர்களுக்கான பயிற்சி முகாம் ஜூலை 26, 27 தேதிகளில் சென்னையில் நடக்கவிருக்கிறது. புதிய கனவுகள், இனிய இலக்குகளுடன் நெடிய பயணத்துக்கு இளையவர்களை வாழ்த்தி வரவேற்கிறது விகடன்!