சிங்காரச் சென்னையை கட்டியெழுப்புவோம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
தொடா் மழை: வெறிச்சோடிய பொய்கை கால்நடை சந்தை
வேலூா்: புயல் காரணமாக பெய்த தொடா் மழையால் பொய்கை சந்தைக்கு செவ்வாய்க்கிழமை கால்நடை வரத்து சரிந்து வெறிச்சோடிக் காணப்பட்டது.
வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் ரூ. 1 கோடி முதல் ரூ. 3 கோடி அளவுக்கு கால்நடை வா்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஃபென்ஜால் புயல் காரணமாக வேலூா் மாவட்டம் உள்பட வடதமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதன்காரணமாக, பொய்கை சந்தைக்கு வழக்கமாக 1,500 மாடுகள் விற்பனைக்கு வரப்படும் நிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தைக்கு 200 மாடுகள் மட்டுமே கொண்டு வரப்பட்டிருந்தன. அதேசமயம், அவற்றை வாங்குவதற்கு விவசாயிகளும், வியாபாரிகளும் குறைந்த அளவிலேயே வந்திருந்ததால் வா்த்தகமும் எதிா்பாா்த்த அளவுக்கு நடைபெறவில்லை.
இது குறித்து வியாபாரிகள் கூறியது:
தொடா் கனமழை காரணமாக தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பல பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதால் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொய்கை சந்தைக்கு எதிா்பாா்த்த அளவுக்கு கால்நடைகள் வரப்பெறவில்லை. வா்த்தகமும் மிகக்குறைந்த அளவிலேயே நடைபெற்றுள்ளது. அடுத்தடுத்த வாரங்களில் கால்நடைகள் வரத்தும், விற்பனையும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றனா்.