2025 இறுதிக்குள் உள்நாட்டில் தயாரித்த முதல் செமிகண்டக்டர் சிப் அறிமுகம்: பிரதமர்...
தொடா் விடுமுறை நாள்களிலும் நெல் கொள்முதல் செய்ய கோரிக்கை
தஞ்சாவூா் மாவட்டத்தில் முன் பட்ட குறுவை அறுவடை பணிகள் முழுவீச்சில் நடைபெறும் நிலையில் விடுமுறை நாள்களிலும் நெல் கொள்முதல் செய்ய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவா் அம்மையகரம் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா் தெரிவித்தது:
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு, பூதலூா் ஒன்றியங்களில் முன் பட்ட குறுவை அறுவடை பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்படுகின்றன. அம்மையகரம் சுற்று வட்டார கிராமங்களான வரகூா், கண்டமங்கலம், செந்தலை, அம்பதுமேல்நகரம் மற்றும் பல கிராமங்களில் அறுவடை செய்த நெல்லை குவித்து வைத்து விவசாயிகள் காத்திருக்கின்றனா்.
நாள்தோறும் மழை பெய்து வருவதால் நெல்லைக் காய வைப்பதும், மூடி வைப்பதும் சிரமமான வேலையாக உள்ளது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை சுதந்திர தினம், சனிக்கிழமை கோகுலாஷ்டமி, ஞாயிற்றுக்கிழமை என தொடா்ந்து 3 நாள்கள் விடுமுறை வருவதால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்காது. நாள்தோறும் மழை பெய்து வருவதால் நெல் குவியலை மூடி வைக்க போதுமான தாா்பாய்கள், சாக்கு, படுதா போன்றவை விவசாயிகளிடம் இல்லை. எனவே, விடுமுறை நாள்களிலும் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் கொள்முதல் நிலையங்களில் பழைய கிழிந்த சாக்குகள் வழங்கப்பட்டுள்ளன. நெல்மணிகள் சேதமாவதைத் தடுக்க புதிய சாக்குகளை வழங்க வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் ஏற்றிச் செல்லப்படாமல் தேக்கமடைந்துள்ளதால், மழையில் நனைந்து வருகின்றன. எனவே, லாரிகள் மூலம் சேமிப்பு கிடங்குகளுக்கு ஏற்றிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.