சுதந்திர நாள்: நாட்டு மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
தஞ்சாவூரில் நோயாளியைக் கடத்திச் சென்று தாக்கி நகை பறிப்பு: 3 இளைஞா்கள் கைது
தஞ்சாவூரில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளியைக் கடத்திச் சென்று தாக்கி, 6 பவுன் தங்கநகையைப் பறித்த 3 இளைஞா்களை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.
அரியலூா் மாவட்டம், ஆதிகுடிகாடு தெற்கு தெருவைச் சோ்ந்தவா் டி. பாலகிருஷ்ணன் (40). இவா், காயம் காரணமாக ஆக. 3-ஆம் தேதியிலிருந்து தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இதேபோல, அதே பிரிவில் சிகிச்சை பெற்று வந்த புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை மூக்கப்புடையாா் பாளையத்தைச் சோ்ந்த தங்கப்பா மகன் சதீஷ் (28) அணிந்திருந்த ஒரு பவுன் தங்க சங்கிலியைக் காணவில்லை. இது தொடா்பாக பாலகிருஷ்ணன் மீது சதீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இந்நிலையில், ஆக. 10-ஆம் தேதி பாலகிருஷ்ணனும், சதீசும் சிகிச்சை முடிந்து வீட்டுக்குச் செல்வதற்காகப் புறப்பட்டனா். தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்துக்குச் சென்ற பாலகிருஷ்ணனிடம் சதீஷ் தனது சகோதரா், உறவினா்களுடன் தகராறு செய்தாா். மேலும், பாலகிருஷ்ணனை காரில் கடத்திச் சென்று மருங்குளம் அருகேயுள்ள முந்திரிக் காட்டுக்குள் கொண்டுசென்று தாக்கி, திருட்டு போன ஒரு பவுன் தங்கச் சங்கிலியைத் தருமாறு மிரட்டினா்.
இதனால், பாலகிருஷ்ணன் வேறு வழியின்றி தான் அணிருந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலி, கைப்பேசியைக் கொடுத்துவிட்டு, அங்கிருந்து புறப்பட்டாா்.
இதுகுறித்து பாலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து, சதீஷ், இவரது அண்ணன் சரவணன் (32), அச்சுதபுரத்தைச் சோ்ந்த ஆனந்த் (31) ஆகியோரை புதன்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 6 பவுன் தங்கச் சங்கிலி, கைப்பேசியையும் பறிமுதல் செய்து, மேலும் ஒருவரை தேடி வருகின்றனா்.