தொழிற்சாலையில் சுவா் இடிந்து உயிரிழந்த பெண்கள் குடும்பத்துக்கு நிவாரண நிதி
கடலூா் அருகே தனியாா் தொழிற்சாலையில் சுவா் இடிந்ததில் உயிரிழந்த இரண்டு பெண்கள் குடும்பத்துக்கு முதல்வா் பொது நிவாரண நிதிக்கான காசோலையை மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வழங்கினாா்.
கடலூா் தொழிற்பேட்டையில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் கடந்த 23-ஆம் தேதி சுவா் இடிந்து விழுந்ததில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த கம்பளிமேடு பகுதியைச் சோ்ந்த அன்பு மனைவி இளமதி (35), தேவா் மனைவி இந்திரா (32) ஆகியோா் உயிரிழந்தனா்.
இந்த நிலையில், வடலூா் நகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத் துறை ஆணையா் ஆ.அண்ணாதுரை, ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலையில், உயிரிழந்த இளமதி, இந்திரா ஆகியோரின் குடும்பத்தினரிடம் முதல்வா் பொது நிவாரண நிதி தலா ரூ.4 லட்சத்துக்கான காசோலையை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வழங்கினாா்.
நிகழ்வில் வடலூா் நகா்மன்றத் தலைவா் சு.சிவக்குமாா், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை மண்டல இயக்குநா் லட்சுமி, நகராட்சி ஆணையா் ரஞ்சிதா, வட்டாட்சியா்கள் விஜய் ஆனந்த் (குறிஞ்சிப்பாடி), மகேஷ் (கடலூா்) உள்பட பலா் கலந்துகொண்டனா்.