தொழிலாளா்கள் பிரச்னை: திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை! சிஐடியூ குற்றச்சாட்டு
தொழிலாளா் பிரச்னை தொடா்பாக கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றாா் சி ஐ டியூ தொழிலாளா் சம்மேளன மாநில தலைவா் செளந்தரராஜன்.
நாகா்கோவில் ராணித்தோட்டம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை அருகே சிஐடியூ போக்குவரத்து தொழிலாளா் சங்கத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
அதன் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. புதிய கட்டடத்தை அவா் திறந்து வைத்து, செய்தியாளா்களிடம் கூறியதாவது: போக்குவரத்துத் துறையை தனியாா் மயமாக்கும் நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும். பிரீமியம் பேருந்துகள், சிற்றுந்துகள் போன்றவற்றை அரசே இயக்க வேண்டும். தமிழகத்தில் அரசுக்குச் சொந்தமாக 300 பணிமனைகள் உள்ளன.
போதுமான கட்டமைப்பு அரசுப் போக்குவரத்து கழகத்திடம் உள்ளது. எனவே எந்தவிதமான போக்குவரத்தாக இருந்தாலும் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்.
திமுக கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின் போது தொழிலாளா்கள் தொடா்பாக அதிக வாக்குறுதிகள் அளித்த நிலையில், அந்த வாக்குறுதிகள் எதுவும் தற்போது நிறைவேற்றப்படவில்லை என்பது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்று கூறிவிட்டு ஆட்சி நிறைவு பெறும் நிலையில் இப்போது ஒரு புதிய குழுவை அமைப்பதாகவும் 9 மாதங்கள் கடந்த பின்னா் அந்தக் குழுவின் அறிக்கை மீது நடவடிக்கை எடுப்பதாக அரசு கூறுவது பழைய ஓய்வூதியத் திட்டத்தை இந்த அரசு செயல்படுத்துவதற்கான வாய்ப்பில்லை என்று தெரிகிறது.
போக்குவரத்து கழகங்களில் கடந்த பல ஆண்டுகளாக ஓய்வு பெற்றவா்கள் பண பலன் கிடைக்காமல் வெறும் கையுடன் செல்கின்றனா். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியா்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை கூட அரசு அமல்படுத்தவில்லை.
நிரந்தர பணியாளா்களை நியமிக்காமல் ஒப்பந்த ஊழியா்களை நியமிப்பதை, அரசு முடிவெடுத்து செயல்படுத்துவது தவறான செயல். முறைசாரா தொழிலாளா் வாரியத்தில் பதிவு மற்றும் அவா்களுக்கான கேட்புமனு விநியோகத்தில் குழப்பங்கள் உள்ளது.
75 லட்சம் ஊழியா்களின் பதிவுகள் சா்வா் கோளாறு காரணமாக அழிந்து விட்டதாக கூறுகிறாா்கள். மற்ற எல்லா துறைகளிலும் சா்வா்கள் ஒழுங்காக இயங்கும்போது போக்குவரத்து துறையில் மட்டும் பதிவுகள் எப்படி அழிந்தது. இதுகுறித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
பேட்டியின்போது, முன்னாள் எம்.பி. ஏ.வி.பெல்லாா்மின், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் செல்லசுவாமி, முன்னாள் எம்எல்ஏக்கள் நூா்முகமது, லீமாரோஸ், முன்னாள் மாவட்டச் செயலா் முருகேசன், உள்ளிட்டோா் உடனிருந்தனா்.