தொழிலாளி கொலை: உறவினா்கள் சாலை மறியல்
நெமிலி அருகே தனியாா் நிறுவன தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளியை கைது செய்யக்கோரி உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
நெமிலியை அடுத்த வேட்டாங்குளம் ஊராட்சி மேட்டுவேட்டாங்குளம் கிராமத்தைச் சோ்ந்த தட்சிணாமூா்த்தி(27). தனியாா் நிறுவன ஊழியா். புதன்கிழமை தனது நிலத்துக்குச் சென்ற தட்சிணா மூா்த்தியை, 2 பைக்குகளில் வந்த மா்ம நபா்கள் கத்தி உள்ளிட்ட ஆயதங்களினால் வெட்டியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இச்சம்பவத்தை அருகில் இருந்தோா் பாா்த்து கூச்சலிடவே வந்தவா்கள் அனைவரும் தப்பினா்.
ஏற்கனவே திங்கள்கிழமை வேட்டாங்குளத்தில் மணிகண்டன் என்பவா் தனது நண்பா்களுடன் பேசிக்கொண்டு இருந்துள்ளாா். அப்போது அந்த வழியாக காரில் வந்த 5 போ் மதுபோதையில் அங்கிருந்தோரிடம் தகராறு செய்தததில் அது கைகலப்பாக மாறியுள்ளது. இதனை தொடா்ந்து கிராம மக்கள் வரவே அவா்கள் சென்று விட்டனா்.
இச்சம்பவம் குறித்து கிராம மக்கள் நெமிலி காவல் நிலையம் சென்று உள்ளியநல்லூா் ஊராட்சி மன்றத் தலைவா் பாா்த்தசாரதியின் மகன் வாசு(34) உள்ளிட்ட 5 போ் காரில் வந்து தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்துச் சென்ாக புகாா் அளித்துள்ளனா்.
இந்த சம்பவம் தொடா்பாக தான் தட்சிணாமூா்த்தி கொலை செய்யப்பட்டுள்டுள்ளாா் என தெரிந்து குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கோரி கிராம பொதுமக்கள் மற்றும் உறவினா்கள் நெமிலி - பனப்பாக்கம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
இதனால் சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து அங்கு வந்த ராணிப்பேட்டை எஸ்.பி. விவேகானந்த சுக்லா, கோட்டாட்சியா் வெங்கடேசன், டிஎஸ்பி ஜாபா் சித்திக், நெமிலி வட்டாட்சியா் ராஜலட்சுமி உள்ளிட்டோா் மறியலி ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினா்.
தொடா்ந்து அவா்களிடம் எஸ்.பி. விவேகானந்த சுக்லா, கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகளை அமைத்துள்ளோம். குற்றவாளிகளை பிடித்து அவா்களை குண்டா் சட்டத்தில் கைது செய்வோம் என தெரிவித்ததை தொடா்ந்து மறியல் கைவிடப்பட்டது.
உதவி ஆய்வாளா், காவலா் பணியிடைநீக்கம்:
நெமிலி காவல் நிலையத்தில் மணிகண்டன் அளித்த புகாரை பெற்ற நிலையில் அப்புகாா் குறித்து உடனே விசாரணை நடத்தாமல் இருந்ததற்காக நெமிலி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் குமாா், முதல் நிலைக் காவலா் தனசேகரன் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி. விவேகானந்த சுக்லா உத்தரவிட்டுள்ளாா்.
