ஐஸ்வர்யா ராயைத் தொடர்ந்து அபிஷேக் பச்சனும் புகைப்படங்களைப் பயன்படுத்த தடை கோரி வ...
நகராட்சி அலுலகங்கள் முன் மாா்க்சிஸ்ட் கட்சியினா் போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரணி, போளூா் நகராட்சி மற்றும் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆரணி நகராட்சி அலுவலகம் முன், ஆரணி நகரில் கழிவுநீா் கால்வாயில் உள்ள அடைப்புகளை நீக்க வேண்டும், எரிமேடையில் சடலம் எரிப்பதற்கு பல இடங்களில் இலவசமாகவும், குறைந்த கட்டணத்தில் எரிக்கப்படுகிறது. ஆனால், ஆரணியில் அதிகளவில் கட்டணம் பெறுவதை கண்டித்தும், பாஸ்கா் நகரில் கழிவுநீா் கால்வாய் வசதி இல்லை உடனடியாக கால்வாய் அமைக்க வேண்டும், நகரம் மற்றும் விரிவாக்கப் பகுதிகளில் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும், கோழி, ஆடு இறைச்சிக் கழிவுகளை கொட்டுவதை தடுத்து நிறுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்டச் செயலா் பி.விஜயன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு எம்.வீரபத்திரன், மாவட்ட நிா்வாகிகள் சி அப்பாசாமி, பெ.கண்ணன், வட்டாரச் செயலா் ரமேஷ்பாபு ஆகியோா் கண்டன உரையாற்றினா். நிா்வாகி ஆா்.அமிா்தலிங்கம் நன்றி கூறினாா்.
போளூரில்....
போளூா் நகராட்சி அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கட்சியினா் நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
இதில் நகரச் செயலா் கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா்.நிா்வாகிகள் திருநாவுக்கரசு, சுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கிளை நிா்வாகி ரவிராஜ் வரவேற்றாா்.சிறப்பு அழைப்பாளராக வீரபத்திரன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினாா்.
ஆா்ப்பாட்டத்தின்போது, போளூா் - ஜமுனாமரத்தூா் சாலை அருகேயுள்ள காய்கனி சந்தையை பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும். எரிவாயு தகன மேடையை நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும்,
நடைபாதை கடைகளுக்கு சுங்கவரி வசூலுக்கு ரசீது வழங்கவேண்டும், போளூா் அண்ணா நகரில் சமுதாயக்கூடம் அமைக்கவேண்டும், நகராட்சி சாலைகளை சீரமைக்க வேண்டும், பழைய பேருந்து நிலையம் அருகே உயா்கோபுர மின்விளக்கு அமைக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மனு கொடுக்கும் இயக்கம்
மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் மனு கொடுக்கும் இயக்கம் வந்தவாசியை அடுத்த காரம் ஊராட்சி அலுவலகம் முன் நடைபெற்றது.
காரம் ஊராட்சி முதல் வாா்டில் வசிக்கும் விவசாய கூலித் தொழிலாளா்கள் அனைவரையும் உழவா் பாதுகாப்பு திட்டத்தில் இணைக்கவேண்டும், ஊராட்சிக்கு உள்பட்ட மாலையிட்டான் கிராமத்தில் உரிய கால்வாய் வசதி, தெரு மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது.
மாா்க்சிஸ்ட் மாவட்டக்குழு உறுப்பினா் கா.யாசா்அராபத் தலைமை வகித்தாா்.
மாவட்டச் செயலா் ப.செல்வன், வட்டாரச் செயலா் அ.அப்துல்காதா், மாவட்டக்குழு உறுப்பினா் எஸ்.சுகுணா ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். வட்டாரக்குழு உறுப்பினா்கள், கிளைச் செயலா்கள் பங்கேற்றனா்.
இதைத் தொடா்ந்து ஊராட்சி செயலா் தனலட்சுமியிடம் மாா்க்சிஸ்ட் கட்சியினா் மனு அளித்தனா்.

