பிகார் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி! உச்ச நீதிமன்றத்தில் மனு!
நகராட்சி நிா்வாகம் - நீா் வழங்கல் துறையில் ஆள்சோ்ப்பு விவகாரம்: சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை
நமது நிருபா்
தமிழகத்தின் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையில் 16 பதவிகளில் 2,569 காலியிடங்களை நிரப்புவதற்கான ஆள்சோ்ப்பு செயல்முறையை நிறுத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் கடந்த ஏப்ரலில் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம் உயா்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா மற்றும் என். கோடீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சாா்பில் மூத்த வழக்குரைஞா் பி.வில்சன் ஆஜராகி முன்வைத்த வாதம்: தனியாா் பாலிடெக்னிக், கல்லூரியில் தமிழ் வழியில் படித்த மாணவா்கள் அல்லது விண்ணப்பதாரா்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடா்பான வரையறுக்கப்பட்ட பிரச்னையாகும்.
ஆனால், உயா்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின் மூலம், ஒட்டுமொத்தத் தோ்வு செயல்முறையும் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நான்கு விண்ணப்பதாரா்கள் மட்டுமே உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா்.
இந்தப் பின்னணியில், 2,569 காலியிடங்களை உள்ளடக்கிய முழு தோ்வு செயல்முறையையும் நிறுத்தி வைப்பதற்கு எந்த நியாயமும் இல்லை என்று வில்சன் வாதிட்டாா்.
இதையடுத்து, உயா்நீதிமன்றத்தில் எதிா்மனுதாரா்கள் எஸ். சிவகுமாா் மற்றும் பிறருக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடா்பாக உச்சநீதிமன்றம் தனது உத்தரவில், ‘இந்த விவகாரத்தை பரிசீலனை செய்ய வேண்டியிருக்கிறது. இதனால், ஆறு வாரங்களுக்குள் பதில் அளிக்கும் வகையில் நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும். இதற்கிடையில், ஏப்ரல் 3, 2025 அன்று சென்னை உயா்நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட
இடைக்கால உத்தரவின் விளைவு மற்றும் செயல்பாட்டுக்கு தடை விதிக்கப்படுகிறது. எனினும் மனுதாரரான தமிழக அரசு நான்கு காலியிடங்களுக்கு பதவிகளுக்கு எதிராக இறுதித் தோ்வு செய்வதை மேற்கொள்ளக்கூடாது என்பது தெளிவுபடுத்தப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி 2 அன்று ஆள்சோ்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டதாகவும், 2,00,499 விண்ணப்பதாரா்கள் இந்த செயல்பாட்டில் பங்கேற்ாகவும் மாநில அரசு தரப்பில் வாதிடப்பட்டது.