பெண் அதிகாரிகள் தலைமையில் செயல்படும் 43% காவல் நிலையங்கள்! - துணை முதல்வா் உதயநி...
நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையில் தேனீக்கள் கொட்டியதில் மோப்ப நாய் பலி!
சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையின்போது தேனீக்கள் கொட்டியதில் பாதுகாப்புப் படையினரின் மோப்ப நாய் பலியாகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா எல்லையில் அமைந்துள்ள கொர்கோட்டாலு மலைப்பகுதியில் நக்சல்களுக்கு எதிரான பாதுகாப்புப் படையினரின் 21 நாள் தொடர் நடவடிக்கைகள் கடந்த மே 11 ஆம் தேதியன்று நிறைவடைந்தன.
அம்மாநில காவல் துறையினர் மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படையினர் இணைந்து மேற்கொண்ட இந்தத் தாக்குதல் நடவடிக்கைகளில் சுமார் 31 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஏப்.27 ஆம் தேதியன்று, அங்குள்ள வனப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது பாதுகாப்புப் படையினரை தேனீக்கள் கொட்டியுள்ளன. இதில், மத்திய ரிசர்வ் காவல் படையினருக்குச் சொந்தமான ரோலோ எனும் 2 வயதுடைய பெல்ஜியன் ஷெபர்டு வகை மோப்ப நாயையும் தேனீக்கள் கொட்டியுள்ளன.
உடனடியாக, அங்கிருந்த பாதுகாப்புப் படையினர் ரோலோவின் மீது பாலீதீன் போர்வையால் மூடி அதைக் காப்பாற்ற முயற்சித்துள்ளனர்.
ஆனால், அதனுள் புகுந்த தேனீக்கள் தொடர்ந்து தாக்கியதில் ரோலோ அந்தப் போர்வையை விட்டு வெளியே ஓடியுள்ளது. இதனால், சுமார் 200-க்கும் மேற்பட்ட தேனீக்கள் தாக்கியதில் ரோலோ அங்கேயே மயங்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ரோலோவை மீட்ட பாதுகாப்புப் படையினர், கால்நடை மருத்துவர்களிடம் கொண்டு சென்றனர். அங்கு அதனைப் பரிசோதித்த மருத்துவர்கள் ரோலோ ஏற்கனவே பலியாகியதாகக் கூறியுள்ளனர்.
கடந்த 2024 ஆம் ஆண்டு முறையானப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் வெடிகுண்டுகளைக் கண்டறிய ரோலோ மத்திய ரிசர்வ் காவல் படையில் சேர்க்கப்பட்டது.
இந்நிலையில், பணியின்போது பலியான ரோலோவுக்கு மத்திய ரிசர்வ் காவல் படையின் உயர் அதிகாரி தற்போது பாராட்டுப் பதக்கத்தை வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, நக்சல்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட 21 நாள் தாக்குதல் நடவடிக்கைகளில் பாதுகாப்புப் படையினரின் தரப்பில் ‘ரோலோ’ எனும் மோப்ப நாய் மட்டும் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ராணுவ வீரர்களுக்கு நாடே தலைவணங்குகிறது: ராஜ்நாத் சிங்!