"எம்.ஜி.ஆர் பற்றி சரோஜா அம்மா சொன்னது; 'ஆதவன்' படத்தில் நடந்ததை மறக்க முடியாது"-...
`நடிகர் சஞ்சய் தத் நினைத்தால் மும்பை குண்டு வெடிப்பு நடந்திருக்காது' -உஜ்வல் நிகம் எம்பி சொல்வதென்ன?
1993-ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 267 பேர் உயிரிழந்தனர். 700-க்கும் அதிகமானோர் காயம் அடைந்தார். இக்குண்டு வெடிப்பை நடத்திய தாவூத் இப்ராகிம் தற்போது பாகிஸ்தானில் பதுங்கி இருக்கிறான்.
இக்குண்டு வெடிப்புக்கு தேவையான வெடிகுண்டுகளை மும்பைக்கு கொண்டு வந்த அபுசலேம் தற்போது போர்ச்சுக்கல் நாட்டில் இருந்து நாடு கடத்திக்கொண்டு வரப்பட்டு மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

பாகிஸ்தான் தங்களது நாட்டில் தாவூத் இப்ராகிம் இல்லை என்று சொல்லிக்கொண்டிருக்கிறது. மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரிக்கப்பட்டு வந்தது. இவ்வழக்கில் நடிகர் சஞ்சய் தத் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. இதில் ஆயுதம் வைத்திருந்த குற்றத்திற்காக அவருக்கு கோர்ட் 6 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது.
அவர் தனது தண்டனையை புனே எரவாடா சிறையில் கழித்தார். மும்பை தொடர்குண்டு வெடிப்பு விசாரணைக்கு வந்தபோது அரசு சார்பாக வழக்கறிஞராக உஜ்வல் நிகம் ஆஜரானார்.
அவர் கடந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க சார்பாக மும்பையில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதையடுத்து உஜ்வல் நிகமை ஜனாதிபதி முர்மு ராஜ்ய சபையின் நியமன உறுப்பினராக நியமித்து இருக்கிறார்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராக பணியாற்றிய உஜ்வல் நிகம் பல முக்கிய வழக்குகளில் அரசு வழக்கறிஞராக ஆஜராகி இருக்கிறார். அவர் மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் ஆஜரானது குறித்து அளித்துள்ள பேட்டியில் பல முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

உஜ்வல் நிகம் தனது பேட்டியில், ''1993-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி மும்பையில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. இக்குண்டு வெடிப்பு நடக்கும் முன்பு மும்பைக்குள் வேனில் ஆயுதங்கள், வெடிகுண்டுகள் கொண்டு வரப்பட்டது.
அந்த வேனை தாவூத் இப்ராகிம் கூட்டாளி அபுசலேம் நடிகர் சஞ்சய் தத் வீட்டிற்கு கொண்டு வந்தார். அதில் இருந்து சில வெடிகுண்டுகளையும், துப்பாக்கிகளையும் சஞ்சய் தத் எடுத்துக்கொண்டார். பின்னர் அனைத்தையும் திரும்ப கொடுத்துவிட்டு ஒரு ஏ.கே.47 ரக துப்பாக்கியை மட்டும் தன்வசம் வைத்துக்கொண்டார்.
அந்த நேரம் இது குறித்து சஞ்சய் தத் போலீஸில் தெரிவித்து இருந்தால் போலீஸார் விசாரித்து இக்குண்டு வெடிப்பை தடுத்து நிறுத்தி இருப்பார்கள்.
இதை சஞ்சய் தத் வழக்கறிஞரிடமும் தெரிவித்தேன். அவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியை பயன்படுத்தி சுடவில்லை. ஆனால் அவர் வெடிகுண்டுகள் குறித்து போலீஸில் சொல்லாமல் போனதால் தொடர் குண்டு வெடிப்பு நடந்து நூற்றுக்கணக்கானோர் இறக்க நேரிட்டது. சட்டத்தின் பார்வைக்கு சஞ்சய் தத் செயல் குற்றமாக கருத்தப்பட்டாலும், அவரை குற்றமற்றவராகவே நான் பார்க்கிறேன். சஞ்சய் தத் இவ்வழக்கில் சிறப்பு நீதிமன்றம் தண்டனை அறிவித்தபோது, அதிர்ச்சியடைந்தார்.

அவரது உடலில் ஒருவித பதட்டத்தை என்னால் பார்க்க முடிந்தது. அவரது தனது கட்டுப்பாட்டை இழந்து காணப்பட்டார். அந்நேரம் நான் அவருக்கு அருகில் நின்றேன். உடனே அவரிடம் பேசினேன். அவருடன் என்ன பேசினேன் என்பது குறித்து இதுவரை நான் யாரிடமும் சொன்னது கிடையாது.
முதல்முறையாக அந்த ரகசிய்த்தை சொல்கிறேன். நான் சஞ்சய்தத்திடம், ''பதட்டம் அடையவேண்டாம். மீடியாக்கள் பார்க்கின்றன. நீங்கள் ஒரு நடிகர். தண்டனையை கண்டு பயந்தால் நீங்கள் தவறு செய்து இருப்பதாக மக்கள் நினைப்பார்கள். மேல்முறையீடு செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னேன். அதற்கு அவர் ஆமாம் சார், ஆமாம் சார் என்று தெரிவித்தார்'' என்று தெரிவித்தார்.
உஜ்வல் நிகம் மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் மார்கமாக வந்து தாக்குதல் நடத்திய வழக்கிலும் அரசு சார்பாக ஆஜரானார். இவ்வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒரே குற்றவாளியான அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டான்.