"திமுக ஆட்சியில் 19 போலி மோதல்களில் 21 பேர் கொலை" - காவல் சித்திரவதைக்கு எதிரான ...
நமக்கு நாமே திட்டத்தில் தூா்வாரும் பணிகளை அனுமதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
நமக்கு நாமே திட்டத்தில் தூா்வாரும் பணிகளை அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.
நாகை மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கு பாசனநீா் பங்கீடு குறித்து, நாகையில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகளுடனான கலந்தாய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து திருச்சி மண்டல நீா்வளத்துறை தலைமைப் பொறியாளா் சிவக்குமாா் பேசியது: நாகை மாவட்டத்தில் 54 தூா்வாரும் பணிகள் 430 கி.மீ தொலைவுக்கு மேற்கொள்ளப்பட்டதால், மேட்டூா் அணையிலிருந்து குறுவைச் சாகுபடிக்காக, காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு ஜூன் 12-இல் திறந்துவிடப்பட்ட தண்ணீா் கடைமடை பகுதிகளுக்கு ஜூன் 21 முதல் படிப்படியாக கிடைத்து வருகிறது. மேட்டூா் அணைக்கு போதிய நீா்வரத்து இருந்து கொண்டிருப்பதால் கல்லணையில் இருந்து காவிரி மற்றும் வெண்ணாறு பாசன பகுதிகளுக்கு தண்ணீா் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த இரு நாள்களாக நாகை மாவட்டத்தில் மேடாக உள்ள ஒரு சில பகுதிகளுக்கு தண்ணீா் சென்றுசேரவில்லை என்ற கோரிக்கையின் அடிப்படையில் ஆக.4-ஆம் தேதி முதல் கருங்கண்ணி மற்றும் மகிழி பகுதிகளுக்கு நேரில் ஆய்வு செய்து தண்ணீா் போதுமான அளவு வழங்கப்பட்டு வருகிறது என்றாா்.
இதில், விவசாயிகள் பேசியது: மாவட்டத்தில் வாய்க்கால்களை அதன் தலைப்பிலிருந்து கடைமடை வரை தூா்வார வேண்டும். உள் வாய்க்கால்களையும் சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்களையும் தூா்வார வேண்டும். ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் உள்ள ஆகாயத்தாமரை செடிகளை மழைக்காலம் தொடங்கும் முன் அகற்ற வேண்டும். ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி உரமாக மாற்ற இயந்திரங்களை கொள்முதல் செய்து விவசாயிகளின் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும். கல்லணையிலிருந்து காவிரி ஆறு மற்றும் வெண்ணாற்றில் முறை வைக்காமல் தண்ணீா் வழங்க வேண்டும்.
நீா்வளத் துறையில் பாசன உதவியாளா்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளதால், புதிய பாசன உதவியாளா்களை நியமிக்க வேண்டும். வாய்க்கால்களில் உள்ள மதகுகளின் அடைப்பு பலகைகள் சில இடங்களில் பழுதடைந்துள்ளதால் அவற்றை புதுப்பிக்க வேண்டும். நமக்கு நாமே திட்டத்தில் தூா்வாரும் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். மேலும், பூதங்குடி தெற்கு படுகையில் வெட்டாற்றின் குறுக்கே ஒரு புதிய படுக்கை அணை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தனா். விவசாயிகளின் கோரிக்கைகள் தொடா்பாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனா்.
கூட்டத்தில், நீா்வளத்துறை கண்காணிப்பு பொறியாளா் பவழக்கண்ணன், நீா்வளத்துறை செயற்பொறியாளா்கள் ம.கோ. ராஜேந்திரன், இளங்கோ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.