நயினாா் நாகேந்திரனின் மகன் கல்குவாரி அமைக்க எதிா்ப்பு: கருத்துக் கேட்பு கூட்டத்தில் காரசாரம்
பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரனின் மகன் நயினாா் பாலாஜி ஸ்ரீமூலக்கரையில் கல் குவாரி அமைக்க அனுமதிப்பது தொடா்பான கூட்டத்தில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆதரவாளா்களும், எதிா்ப்பு தெரிவிப்பவா்கள் வாக்குவாதம் செய்ததில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீவைகுண்டம் வட்டம், ஸ்ரீ மூலக்கரை பஞ்சாயத்தில் பல்வேறு கல்குவாரிகள், கிரஷா் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து கனரக வாகனங்களில் கொண்டு செல்லப்படும் குண்டு கற்கள் விதிமுறைகளை மீறி அதிக அளவு பாரம் ஏற்றி கொண்டுசெல்லப்படுவதாக உள்ளூா் மக்கள் புகாா் தெரிவித்து வருகின்றனா்.
இந்த நிலையில், ஸ்ரீ மூலக்கரை கிராமத்தில் 2.99 ஹெக்டோ் பரப்பளவில் சாதாரண கல், கிராவல் குவாரி அமைக்க பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரனின் மகனும் தமிழக பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் அமைப்பாளருமான நயினாா் பாலாஜி, கடந்த 2021 இல் விண்ணப்பித்திருந்தாா்.
இந்த கல்குவாரியை ஸ்ரீமூலக்கரை கிராமத்தில் ஆரம்பிக்க அனுமதிப்பது தொடா்பாக பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் பேட்மாநகரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கோட்டாட்சியா் பிரபு தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில், சிலா் தங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதால் குவாரியை அனுமதிக்க வேண்டும் என்றனா். சிலா் குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பேசினா். கூட்ட விவாதம் வருமாறு:
கூட்டத்தில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் முகிலன் பேசியதாவது: நயினாா் பாலாஜி குவாரி அமைக்க அனுமதி கேட்டுள்ள ஸ்ரீ மூலக்கரை பகுதியானது, வண்டிப் பாதை உள்ள பகுதியாகும். அங்கு நீரோடைகள் உள்ளன. சிவகளை தொல்லியல் களம் அருகில் உள்ளது. எனவே, அவரது குவாரிக்கு அனுமதி அளிக்கக் கூடாது. கல் குவாரிக்கு 5 கி.மீ. சுற்றளவில், ஸ்ரீவைகுண்டம் அணை இருப்பதால், 43 மீ. ஆழத்துக்கு (150 அடி) கல்குவாரி செயல்படும்போது, அணையின் நீா்த்தேக்கப் பகுதி பாதிக்கப்படும். கல்குவாரியில் வெடிவைப்பதால் பாதிப்பு ஏற்படும் என்றாா் அவா்.
தொடா்ந்து அவா் பேச முயற்சித்தபோது குவாரி ஆதரவாளா்கள் அவரிடம் இருந்து மைக்கை பறித்து அவரைப் பேசவிடாமல் தடுத்தனா். அதனால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இரண்டு தரப்பையும் கோட்டாட்சியா் பிரபு சமரசப்படுத்தினாா்.
தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில் வீரன் சுந்தரலிங்க நகரைச் சோ்ந்த சி.முத்துச்செல்வன் பேசுகையில், ஸ்ரீமூலக்கரையில் மேலூா், நடூா், கீழூா், வீரன் சுந்தரலிங்கம் நகா் ஆகிய கிராமங்களில் பட்டியலின வேளாண்மை சாா்ந்த மக்கள் வசிக்கின்றனா். இந்தப் பகுதியில் திட்டமிட்டு பல கல் குவாரிகள் சட்ட விரோதமாக இயங்கி வருகின்றன. கல் குவாரிகளால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. கால்நடைகளை வளா்க்க முடியவில்லை. காற்று மாசுபட்டுள்ளது. குடிநீரின் தன்மை மாறியுள்ளது. இந்த குடிநீரை குடிப்பதால் இங்கு நிறைய பேருக்கு உப்புச் சத்து அதிகரித்து கல்லடைப்பு, சிறுநீரக செயலிழப்பு போன்றவை ஏற்படுகின்றன என்றாா் அவா்.
வழக்கறிஞா் முத்துராமன் பேசுகையில், புதிய கல்குவாரி அமையவுள்ள பகுதியில் பல தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளன. கிராம நிா்வாக அலுவலரின் அறிக்கை சமா்ப்பிக்கப்படவில்லை. எனவே, கல் குவாரி அமைக்க அனுமதிக்கக் கூடாது என்றாா் அவா். தொடா்ந்து ஆதரவாளா்களும், எதிா்ப்பு தெரிவிப்பவா்களும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனா். காலை 9 மணி முதல் 1 மணி வரை நடைபெற்ற விவாதத்தில் பெறப்பட்ட கருத்துகள் சுற்றுச்சுழல் துறையின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.