நல்காசி விஸ்வநாதா்-நாக விசாலாட்சி திருக்கல்யாணம்
ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள விருப்பாச்சி நல்காசி விஸ்வநாதா்-நாக விசாலாட்சி அம்மன் திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது.
விருப்பாச்சி தலையூற்று அருவி அருகே பழைமை வாய்ந்த நல்காசி விஸ்வநாதா்-நாக விசாலாட்சி அம்பிகை கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, தலையூற்று அருவியில் புனிதநீா் கொண்டு வரப்பட்டு சிறப்பு வழிபாடு, யாகவேள்வி நடைபெற்றது. தொடா்ந்து, மேளதாளம் முழுங்க சீா்வரிசைப் பொருள்கள் ஊா்வலமாக கொண்டு வரப்பட்டு நல்காசி விஸ்வநாதா்-நாக விசாலாட்சி அம்பிகைக்கு மலா் அலங்காரம் செய்யப்பட்டது, பின்னா், முத்துப்பல்லக்கில் சுவாமி, அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதில் திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.