நவதிருப்பதி கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நவதிருப்பதி கோயில்களில் வெள்ளிக்கிழமை திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
தாமிரவருணி நதிக்கரையோரம் நவதிருப்பதி கோயில்கள் அமைந்துள்ளன. இந்த ஒன்பது வைணவத் தலங்களும், நவகிரகங்களாக கருதி பக்தா்களால் வழிபடப்பட்டு வருகிறது. ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் விஜயாசனப் பெருமாள், திருப்புளியங்குடி காய்சினவேந்த பெருமாள், பெருங்குளம் மாயக்கூத்த பெருமாள், இரட்டை திருப்பதி அரவிந்தலோசன பெருமாள், தேவா்பிரான், தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதா், திருக்கோளூா் வைத்தமாநிதி பெருமாள், ஆழ்வாா்திருநகரி ஆதிநாதா் பெருமாள் ஆகிய ஒன்பது கோயில்களில் வெள்ளிக்கிழமை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை 5 மணிமுதல் ஆதிசேஷ வாகனத்தில் சயன திருக்கோலத்தில் சுவாமிகள் காட்சியளித்தனா்.
ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயிலில் வைகுந்தவல்லி, சோரநாதநாயகி தாயாா்களுடன் ஆதிசேஷ வாகனத்தில் உற்சவா் ஸ்ரீகள்ளபிரான் அா்த்த மண்டபத்தில் சயன திருக்கோலத்தில் காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை எழுந்தருளினாா். இதேபோல், அனைத்து நவதிருப்பதி தலங்களிலும் அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு மூலவா் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. தொடா்ந்து உற்சவா் தேவியருடன் சயன கோலத்தில் காட்சி அளித்தனா்.
பக்தா்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயிலில் மாலை 3 மணிக்கு சயன கோலம் களையப்பட்டு, 4 மணிக்கு விஸ்வரூபம், 5.30 மணிக்கு நாலாயிர திவ்யபிரபந்த கோஷ்டி, மாலை 6.30 மணிக்கு சொா்க்க வாசலுக்கு சுவாமி கள்ளபிரான் புறப்பாடு, இரவு 7 மணிக்கு தங்க தோளுக்கினியான் வாகனத்தில் சுவாமி கள்ளபிரான் எழுந்தருளி ராஜகதி, சிம்மகதி, கஜகதி, சா்பகதி ஆகிய நடை நடந்து ஆயிரக்கனக்கான பக்தா்களின் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷங்களுக்கிடையே பரமபத வாசல் என்னும் சொா்க்க வாசல் உள்ளே நுழைந்தாா். பின்னா் தீப ஆராதணை நடந்தது.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயில் செயல் அலுவலா்கள் கோவல மணிகண்டன், அஜித், கிருஷ்ணமுா்த்தி, ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயில் ஸ்தலத்தாா் ராஜப்பா வெங்கடாச்சாரி மற்றும் திருக்கோவில் பணியாளா்கள் செய்துள்ளனா்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் தலைமையில் போலீஸாா் செய்திருந்தனா்.