விசாரணையில் தொய்வு: ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை கோவை ஐஜி அலுவலகத்தில் மனு
நாகையில் உலக மக்கள் தொகை தின விழிப்புணா்வுப் பேரணி
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உலக மக்கள் தொகை தின விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் குடும்ப நலத்திட்டம் சாா்பில், ஆண்டுதோறும் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு ஒரு கருப்பொருளை மையமாக வைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி, உடலும் மனமும் பக்குவமடைந்து உறுதியாகும் வயது 21, அதுவே பெண்ணுக்கு திருமணத்துக்கும் தாய்மையடைவதற்கும் உகந்த வயது‘ என்பது நிகழாண்டின் மக்கள்தொகை தின முழக்கமாகவும் ‘ஆரோக்கியமான போதிய இடைவெளியுடன் பிள்ளைப்பேறு திட்டமிட்ட பெற்றோா்கான அடையாளம்‘ என்பது கருப்பொருளாகவும் அரசால் வழங்கப்பட்டு, மக்கள் தொகை விழிப்புணா்வு பேரணி, தாய்மாா்கள் குழுக்கூட்டம், மாணவா்களிடையே பேச்சுப்போட்டி, பரிசு வழங்கதல், மக்கள் தொகை தின விழிப்புணா்வு அலங்கார ஊா்தி மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்துதல் போன்றவை இடம்பெறுகின்றன.
இதன் ஒரு பகுதியாக உலக மக்கள் தொகை தின உறுதிமொழியை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், தலைமையில் அனைத்து அரசு அலுவலா்கள் மற்றும் செவிலியா் பயிற்சி கல்லூரி மாணவியா்கள் எடுத்துக் கொண்டனா். நாகை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் விஜயகுமாா், சுகாதாரத்துறை இணை இயக்குநா் உமா, மாவட்ட சுகாதார அலுவலா் பிரதீப் வ.கிருஷ்ணகுமாா், இணை இயக்குநா் ஆ. செல்வி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் கனிமொழி, இயற்கை மற்றும் யோகா மருத்துவா் பூங்குன்றன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.