மேட்டூா் காவிரியில் ஆயிரக்கணக்கில் இறந்து மிதக்கும் மீன்கள்!
நாகை: தன்னைத்தானே சுட்டுக்கொண்டு பெண் காவலர் தற்கொலை
நாகை ஆட்சியர் அலுவலகத்தில் பெண் காவலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் கருவூல அலுவலகத்தில் சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மணக்குடி பகுதியைச் சேர்ந்த நாகையன் மகள் அபிநயா(29), நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கருவூல அலுவலகப் பாதுகாப்பு பணியில் சனிக்கிழமை (மே 24) இரவு முதல் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில், அபிநயா பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பகுதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலையில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சக போலீஸார் நிகழ்விடத்துக்கு சென்று பார்த்தனர்.
அபிநயா குண்டு பாய்ந்து சடலமாக கிடந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.கே. அருண்கபிலன் விசாரணை நடத்தினார்.
அபிநயா, தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டதால் குண்டு அவரது வலது கழுத்தில் பாய்ந்து இடது காதுக்கு மேல் வெளியேறியது தெரியவந்தது. போலீஸார் அபிநயாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கான தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் பெண் காவலர் அபிநயா, சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட காவலர் வினோத் என்பவரை காதலித்து வந்ததும், வினோத் தற்கொலைக்கு பிறகு மன உளைச்சலில் இருந்த அபிநயா மருத்துவ விடுப்பில் சென்று மீண்டும் பணிக்கு 5 நாள்களுக்கு முன்பு வந்துள்ளார் தெரியவந்துள்ளது.
இதன் காரணமாகவே அபிநயா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].