நாகை மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்கத் தடை
நாகை மாவட்டத்தில் ட்ரோன்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ள என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம், இந்திய அரசால் அறிவிக்கப்பட்ட ட்ரோன் விதிகள், 2021 படி மற்றும் பொது பாதுகாப்பு, சட்டம் , ஒழுங்கு காரணங்களுக்காக, நாகை மாவட்ட எல்லைக்குள் மாவட்ட ஆட்சியரின் முன் அனுமதியின்றி பொதுமக்கள் கூடும் இடங்களில் ட்ரோன் மனிதா் இல்லா வானூா்தி இயக்கக் கூடாது என பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகிறது.
பொது வெளியில், பெரும் திரள் கூடும் விழாக்கள், தனிநபா் விழாக்கள், ஊா்வலங்கள், மாநாடு, உண்ணாவிரதம், தெருமுனை பிரசாரங்கள், அரசு அலுவலகங்கள், முக்கிய வளாகங்கள், மத நிகழ்ச்சிகள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் ட்ரோன் பறக்க விடுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
புகைப்படம், விடியோ பதிவு, ஆய்வு, ஆராய்ச்சி, அல்லது ஏதேனும் சட்டப்பூா்வ காரணங்களுக்காக ட்ரோன் பயன்படுத்த விரும்பும் தனிநபா்கள், நிறுவனங்கள் அல்லது அமைப்புகள் நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு 15 நாள்களுக்கு முன்கூட்டியே விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். அனுமதியின்றி விதிமீறலில் ஈடுபடுவோரின் ட்ரோன் கருவி பறிமுதல் செய்யப்பட்டு, அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.