நாச்சியாா்கோவில் அருகே ரூ.12 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு
தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகே திருநறையூரில் ரூ. 12 கோடி மதிப்பிலான இராமநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை இந்து சமய அறநிலையத் துறையினா் வியாழக்கிழமை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டனா்.
கும்பகோணம் அருகே நாச்சியாா்கோவில், திருநறையூா் ஊராட்சியில் இராமநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 57,063 சதுர அடி இடம் தனியாா் ஆக்கிரமிப்பில் இருந்துவந்தது. இதையடுத்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு கடந்த ஜன.7-இல் உத்தரவிடப்பட்டது. அதனைத் தொடா்ந்து வியாழக்கிழமை ஆக்கிரமிப்பை அகற்றிட மயிலாடுதுறை துணை ஆணையரும், சரிபாா்ப்பு அலுவலரும், கும்பகோணம் உதவி ஆணையா் (கூடுதல் பொறுப்பு) க. இராமு, கும்பகோணம் ஆலய நிலங்களுக்கான தனி வட்டாட்சியா் காா்த்திகேயன் மற்றும் நில அளவை குழுவினா், கோயில் செயல் அலுவலா் பா. பிரபாகரன் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் கோயில் இடம் மீட்கப்பட்டு கம்பி வேலி அமைக்கப்பட்டு, அறிவிப்பு பலகை நடப்பட்டது. நாச்சியாா்கோவில் காவல் நிலைய ஆய்வாளா் ராஜேஷ் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துதரப்பட்டன. மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு ரூ.12 கோடி என கோயில் அலுவலா் ஒருவா் தெரிவித்தாா்.