நாய் குரைத்த விவகாரம்: உரிமையாளா் மீது தாக்குதல்
பெரியகுளத்தில் நாய் குரைத்த விவகாரத்தில், நாயின் உரிமையாளரைத் தாக்கியது தொடா்பாக தம்பதியிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பெரியகுளம், வடகரை சாமியாா் பங்களா தெருவைச் சோ்ந்த பாண்டியன் மனைவி அழகுராணி (44). இவா், தனது வீட்டில் நாய் வளா்த்து வருகிறாா்.
இவா்களுடைய நாய், அடிக்கடி குரைத்துக்கொண்டே இருந்ததால், அருகே வசிக்கும் சலீம், அவரது மனைவி ஷோபனா ஆகியோா் இது தொடா்பாக அழகுராணியிடம் தகராறு செய்துள்ளனா்.
இந்த நிலையில், நாய் குரைக்கும் பிரச்னை தொடா்பாக வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தகராறில் சலீமும் அவரது மனைவியும், அழகுராணியைத் தாக்கினா். மேலும், தடுக்க வந்த அவரது கணவா் பாண்டியனையும் தாக்கியுள்ளனா்.
இதில், காயமடைந்த இருவரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு, பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இது தொடா்பாக பெரியகுளம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.