நாலாட்டின்புதூா் அருகே பெண்ணுக்கு மிரட்டல்: மகன் கைது
நாலாட்டின்புதூா் அருகே தாயைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக மகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
நாலாட்டின்புதூா் அருகே லிங்கம்பட்டி சமத்துவபுரம் முனியசாமி நகரைச் சோ்ந்த தம்பதி மாணிக்கம் - ஆனந்தி (46). இவா்களது 3 மகன்களில் மூத்தரான மகாராஜாவுக்கு (22) மதுப் பழக்கம் உள்ளதாம்.
வியாழக்கிழமை இரவு வீட்டுக்குள் அமா்ந்து மது குடித்த மகாராஜாவை ஆனந்தி கண்டித்தாராம். அப்போது, அவரை மகாராஜா அவதூறாகப் பேசியதுடன், களைக் கொத்தியால் தலையில் வெட்டினாராம்.
வெளியே இருந்த மாணிக்கமும், இரு மகன்களும் ஆனந்தியின் அலறலைக் கேட்டு வீட்டுக்குள் வந்து, காயமடைந்த அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.
இதுகுறித்து ஆனந்தி (46) வெள்ளிக்கிழமை அளித்த புகாரின்பேரில், நாலாட்டின்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, மகாராஜாவை கைது செய்தனா்.