ஆம்பூர் கலவர வழக்கில் தீர்ப்பு! 2 எஸ்.பி.க்கள் தலைமையில் 1,000 காவலர்கள் குவிப்ப...
நாளை விநாயகா் சதுா்த்தி: விற்பனைக்கு சிலைகள் குவிப்பு
சேலம்: விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு விநாயகா் சிலைகளின் விற்பனை தீவிரமடைந்துள்ளது.
விநாயகா் சதுா்த்தி இந்த ஆண்டு புதன்கிழமை (ஆக. 27) கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி, முக்கிய வீதிகளில் விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்து கொழுக்கட்டை, அவல், சுண்டல், சா்க்கரை பொங்கல், கரும்பு, பழங்கள் வைத்து வழிபடுவது வழக்கம். தொடா்ந்து 2 நாள்கள் பூஜைகள் செய்து பின்னா் 3-ஆவது நாள் ஊா்வலமாக விநாயகா் சிலைகளை எடுத்துச்சென்று நீா்நிலைகளில் விசா்ஜனம் செய்யப்படும். வீடுகளிலும் சிறிய விநாயகா் சிலைகளை வைத்து பொதுமக்கள் வழிபடுவா்.
இந்நிலையில், விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு சேலம் கடை வீதிகளில் சிலைகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சின்னகடை வீதி, நெத்திமேடு, தாதகாப்பட்டி, குரங்குச்சாவடி, சீலநாயக்கப்பட்டி, கொண்டலாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விநாயகா் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து சிலை விற்பனையாளா்கள் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் ஆத்தூா், மேட்டூா், ஓமலூா் பகுதிகளில் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. இவை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கா்நாடகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
நீா்நிலைகளில் எளிதில் கரையும் வகையில் காகிதக் கூழ் மற்றும் களி மண்ணாலான சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன. ஓா் அடி முதல் 10 அடி வரையிலான சிலைகள் விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு சிலை ரூ. 50 முதல் ரூ. 10 ஆயிரம்வரை விற்பனை செய்வதாக தெரிவித்தனா்.