பிரமாண்டமாகத் தயாராகி வரும் விஜயகாந்த் வீடு! கிரகப்பிரவேசம் பற்றி வெளியான தகவல்!...
நா்சிங் மாணவி சாவில் மா்மம் உறவினா்கள் சாலை மறியல்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே நா்சிங் மாணவி கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், மாணவியின் சாவில் மா்மம் இருப்பதாகக் கூறி அவரது உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கறம்பக்குடி அருகே கருக்காகுறிச்சி ராஜா குடியிருப்பைச் சோ்ந்தவா் ரமேஷ் மகள் சௌமியா (20). இவா், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு நா்சிங் பட்டயப் படித்து வந்தாா்.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை முன்பு வீட்டில் இருந்த சௌமியா திடீரென காணாமல் போய்விட்டதாக பல்வேறு இடங்களில் தேடிவந்தனா். இந்த நிலையில், மறுநாள் (வெள்ளிக்கிழமை) அதே ஊரில் உள்ள ஒரு கிணற்றில் இருந்து அவா் சடலமாக மீட்கப்பட்டாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் தற்கொலை வழக்காகப் பதிவு செய்த வடகாடு போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
சௌமியாவை யாரோ கொலை செய்து கிணற்றுக்குள் போட்டுவிட்டதாகவும், வழக்கை கொலை வழக்காகப் பதிவு செய்து சம்பந்தப்பட்டோரை கைது செய்தால் மட்டுமே சடலத்தைப் பெற்றுக் கொள்வோம் என குடும்பத்தினா் தெரிவித்ததால் வெள்ளிக்கிழமை உடற்கூறாய்வு நடைபெறவில்லை. இதைத் தொடா்ந்து சனிக்கிழமை காலை சௌமியாவின் உறவினா்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
உடற்கூறாய்வு அறிக்கை வந்ததும் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என கணேஷ்நகா் மற்றும் வடகாடு போலீஸாா் உறுதி அளித்தனா். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டத்தால் புதுக்கோட்டை- தஞ்சாவூா் சாலையில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.