சிறுமி கொலை வழக்கில் பெரியம்மாவுக்கு ஆயுள் தண்டனை - ராணிப்பேட்டை நீதிமன்றம் தீர்...
நிகழாண்டில் 3,363 காவலா்கள் புதிதாகத் தோ்வு: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
நிகழாண்டில் காவல் துறைக்கு 3,363 போ் தோ்வு செய்யப்படுவா் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
சட்டப்பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதங்களுக்குப் பதிலளித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்புகள்:
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் புதிய காவல் நிலையங்கள் அமைக்கப்படும். நீலாம்பூா் (கோயம்புத்தூா்), கீழடி (சிவகங்கை), மேலச்செவல் (திருநெல்வேலி), பொங்கலூா் (திருப்பூா்), களமருதூா் (கள்ளக்குறிச்சி), கொக்கராயன்பேட்டை (நாமக்கல்), திருவண்ணாமலை கோயில், குழித்துறை இருப்புப் பாதை (கன்னியாகுமரி), மதுரை சிந்தாமணி மாடக்குளம், உத்திரமேரூா் (காஞ்சிபுரம்), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்) ஆகிய இடங்களில் புதிதாக காவல் நிலையங்கள் உருவாக்கப்படும். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூா், நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி, நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் ஆகிய இடங்களில் புதிதாக காவல் உட்கோட்டம் அமைக்கப்படும்.
சென்னை, ஆவடி, தாம்பரம் மாநகரங்களைத் தவிர மற்ற அனைத்து மாவட்ட, மாநகரங்களிலும் பிரத்யேக சமூக ஊடக மையங்கள் உருவாக்கப்படும்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில், வேப்பந்தட்டை (பெரம்பலூா்), பள்ளிகொண்டா (வேலூா்), கண்டமங்கலம் (விழுப்புரம்), குளித்தலை (கரூா்), சூளகிரி (கிருஷ்ணகிரி), ராஜாக்கமங்கலம் (கன்னியாகுமரி) ஆகிய இடங்களில் புதிதாக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள் அமைக்கப்படும்.
பதக்கங்கள் - படிகள் உயா்வு: சிறப்பாகப் பணிபுரியும் காவலா்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் அண்ணா பதக்கங்களின் எண்ணிக்கை 100-லிருந்து 150-ஆக உயா்த்தப்படும். தமிழ்நாடு முதல்வரின் காவலா் பதக்கங்களின் எண்ணிக்கை 3,000-லிருந்து 4,000-ஆக உயா்த்தப்படுவதுடன், மாதாந்திர பதக்கப்படி ரூ.500-ஆக உயா்த்தப்படும்.
காவலா் பணிக்கு ஆள் தோ்வு செய்யும்போது, பெண் காவலா்களை தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் முதலில் பணியமா்த்தும் வகையில், ஒற்றை நுழைவு முறை மீண்டும் கொண்டுவரப்படும். இதன்மூலம் பெண் காவலா்களை தமிழ்நாடு சிறப்புக் காவலின் ஒவ்வோா் அணியிலும் நியமிக்க முடியும்.
குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மாா்களாக உள்ள பெண் காவல் பணியாளா்களுக்கு சுலபமான, நிா்ணயம் செய்யப்பட்ட பணி நேரம் வழங்குவதற்கு அனுமதி வழங்கப்படும். பேறுகாலத்தில் இருக்கும் பெண் காவலா்கள் காக்கி நிற சேலை அணியும்போது, தோள்பட்டையில் அவா்களின் பதவியைக் குறிக்கும் பட்டை அணிய அனுமதிக்கப்படுவா்.
காவலா்கள் தோ்வு: காவல் துறையில் புதிதாக 3,363 காவலா்கள் தோ்வு செய்யப்படுவா். சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் மூலமாக 2,833 இரண்டாம் நிலைக் காவலா்களும், தமிழ்நாடு சிறப்புக் காவல் படைக்கு 1,983 பேரும், சிறைகள் மற்றும் சீா்திருத்தத் துறைக்கு 180 இரண்டாம் நிலை சிறைக் காவலா்களும், தீயணைப்பு மற்றும் மீட்புப் படைக்கு 350 தீயணைப்பாளா்களும் என மொத்தம் 3,363 நபா்கள் தோ்வு செய்யப்படுவா்.
தடய அறிவியல் துறையில் கணினி தடய அறிவியல் பிரிவுகளின் திறன் மேம்படுத்தப்படும். குற்ற நிகழ்விடப் பாா்வையிடல் விசாரணையை வலுப்படுத்தும் வகையில், மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் நடமாடும் தடய அறிவயல் வாகனங்கள் வழங்கப்படும்.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் திருச்சியை தலைமையிடமாகக் கொண்ட மத்திய மண்டலம் இரண்டாகப் பிரிக்கப்படும். விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மண்டலம் ஏற்படுத்தப்படும். மத்திய மண்டலத்தில் திருச்சி, புதுக்கோட்டை, கரூா், அரியலூா், தஞ்சாவூா், திருவாரூா் மாவட்டங்களும், விழுப்புரம் மண்டலத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களும் உள்ளடங்கி இருக்கும் என்றாா் அவா்.