உறுப்பினர் சோ்க்கை மட்டுமே வெற்றியைத் தீர்மானிக்காது! மகாராஷ்டிர ஆளுநர் சி.பி....
நிசார் ரேடார் காலநிலை குறித்த தரவுகளை வழங்கும்: ஜிதேந்திர சிங்
புதுதில்லி: ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஜூலை 30 ஆம் தேதி ஏவப்படும் "நாசா-இஸ்ரோ செயற்கைத் துளை ரேடார் (நிசார்)" இந்திய-அமெரிக்க அறிவியல் ஒத்துழைப்புக்கான உலகளாவிய அளவுகோலாக இது திகழும். இந்த ரேடார் உலக அளவில் பேரிடர்கள், விவசாயம் மற்றும் காலநிலை குறித்த முக்கியமான தரவுகளை வழங்கும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
ஜிதேந்திர சிங் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுடன் பேசியதாவது:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) மற்றும் அமெரிக்காவின் தேசிய வானூர்தி மற்றும் விண்வெளி நிர்வாகத்தின(நாசா) முதல் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நாசா-இஸ்ரோ செயற்கை துளை ரேடார் (நிசார்) ஜூலை 30 ஆம் தேதி மாலை 5.40 மணிக்கு இந்தியாவின் ஜிஎஸ்எல்வி-எப்16 ராக்கெட் மூலம் ஆந்திரம் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்படுகிறது. ராக்கெட்டை விண்ணில் ஏவப்படுவதற்கான 28 மணி நேர கவுண்டன் வரும் 29 ஆம் தேதி பிற்பகல் 1.40 மணிக்கு தொடங்குகிறது. இது இந்திய-அமெரிக்க விண்வெளி ஒத்துழைப்பின் பயணத்தில் ஒரு தீர்க்கமான தருணத்தை வெளிப்படுத்துகிறது.
இந்த ஒத்துழைப்பின் மூலம் பூமியை கண்காணிக்க இரு தரப்பு ஒத்துழைப்புடனான பணியாக இது அமைய இருக்கிறது. மேலும் இஸ்ரோவின் ஒட்டுமொத்த சர்வதேச ஒத்துழைப்புகளிலும் இது ஒரு முக்கிய தருணம் என்றும் அவர் கூறினார்.
மேலும், இந்த ஏவுதல் உத்திசார் அறிவியல் கூட்டாண்மைகளின் முதிர்ச்சியையும், மேம்பட்ட பூமி கண்காணிப்பு அமைப்புகளில் நம்பகமான உலகளாவிய வல்லமையாக இந்தியா உருவெடுப்பதை பிரதிபலிக்கிறது என்றார்.
இது வெறும் செயற்கைக்கோளை ஏவும் பணியல்ல, அறிவியலுக்கும் உலக நலனுக்கும் உறுதியளித்த இரண்டு ஜனநாயக நாடுகள் இணைந்து என்ன சாதிக்க முடியும் என்பதை நிரூபிக்கும் தருணம்.
நிசார் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் சேவை செய்வது மட்டுமல்லாமல், உலகில் அனைத்து நாடுகளுக்கும், குறிப்பாக பேரிடர் மேலாண்மை, விவசாயம் மற்றும் காலநிலை கண்காணிப்பு போன்ற துறைகளில் முக்கியமான தரவுகளை வழங்கும் என்று ஜிதேந்திர சிங் கூறினார்.
இந்த செயற்கைக்கோள் 2,392 கிலோ எடை கொண்டது மற்றும் சூரிய-ஒத்திசைவான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும், இது 12 நாள்களுக்கு ஒரு முறை உயர் தெளிவுத்திறன் கொண்ட பூமித் தரவுகள் மற்றும் பனி மேற்பரப்புகளின் தொடர்ச்சியான படங்களை வழங்கும்.
இரவு, பகல் என அனைத்து சூழ்ந்நிலைகளிலும் உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களை வழங்கும். இதற்காக எல் பேண்ட், எஸ் பேண்ட் ஆகிய சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார் தொழில்நுட்பங்கள் செயற்கைக்கோளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒரே செயற்கைகோளில் 2 அலைவரிசைகள் கொண்ட கருவிகள் இடம்பெறுவது இதுவே முதல்முறையாகும்.
இது சுற்றுச்சூழல் அமைப்பு இடையூறுகளைத் தொடர்ந்து கண்காணிக்க அனுமதிக்கும் மற்றும் பூகம்பங்கள், சுனாமிகள், எரிமலை வெடிப்புகள் மற்றும் நிலச்சரிவுகள் போன்ற இயற்கை ஆபத்துகளை மதிப்பிட உதவும்.
இது வளரும் நாடுகளுக்கு உதவும் வகையில் உலகளாவிய அறிவியல் ஆராய்ச்சி மற்றும் பேரிடர் தருணங்களில் விரைந்து முடிவெடுப்பதை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது பூமியின் மேலோடு மற்றும் மேற்பரப்பு இயக்கத்தில் ஏற்படும் நுட்பமான மாற்றங்களைக் கூட கண்காணிக்கும். முக்கியமாக, கடல் பனி வகைப்பாடு, கப்பல் கண்டறிதல், கரையோர கண்காணிப்பு, புயல் கண்காணிப்பு, பயிர் நில வரைபடம் மற்றும் மண்ணின் ஈரப்பதத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றிற்கும் செயற்கைக்கோளின் தரவு பயன்படுத்தப்படும். இவை அனைத்தும் அரசாங்கங்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை நிறுவனங்களுக்கு இன்றியமையாதவை என்றார்.