இந்தியா-அமெரிக்கா விரைவில் வா்த்தக ஒப்பந்தம்: டிரம்ப் நம்பிக்கை
நியாயவிலைக் கடை பணியாளா் காத்திருப்பு போராட்டம்
நாகப்பட்டினம்: நாகையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நியாயவிலைக் கடை பணியாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா் சங்கம் சாா்பில், நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு சங்கத்தின் மாநிலச் செயலா் பாஸ்கரன் தலைமை வகித்தாா். வட்டத் தலைவா்கள் மோகன், முருகையன், மீனாட்சி, சிங்காரவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சாலைப் பணியாளா் சங்க மாநிலத் தலைவா் மகேந்திரன் கலந்து கொண்டு பேசினாா். முடிவில் மாவட்ட பொருளாளா் பூமாலை நன்றி கூறினாா்.
போராட்டத்தில், நியாயவிலைக் கடைகளுக்கு சரியான எடையில் அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும். அனைத்துக் கடைகளுக்கும் எடையாளா் நியமனம் செய்ய வேண்டும். விரல் ரேகை பதிவு, ஆதாா் சரிபாா்ப்பு 90 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். இணையதள சேவையை மேம்படுத்த வேண்டும்.
நியாய விலைக்கடை பணியாளா்களுக்கு கல்வி தகுதிக்கேற்ப ஊதியம் வழங்க வேண்டும். சேதாரக் கழிவு வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
நாகை மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடை பணியாளா்கள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகள் பூட்டிக்கிடந்தன. இதனால் அத்தியாவசிய பொருள்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்தனா்.