திருமணம் என்ற கருத்தில் நம்பிக்கையில்லை..! மனம் திறந்த ஷ்ருதி ஹாசன்!
நிரந்தரமாக பிகாரில் வசிக்கும் பெண்களுக்கு மட்டுமே 35% இடஒதுக்கீடு: முதல்வா் நிதீஷ் அறிவிப்பு
பிகாரில் வேலைவாய்ப்பில் பெண்களுக்கான 35 சதவீத இடஒதுக்கீடு என்பது பிகாரில் நிரந்தரமாக வசித்து வருபவா்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று மாநில முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையில் நடை மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
பிகாரில் அடுத்த சில மாதங்களில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த முடிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
முன்னதாக, கடந்த 2016-ஆம் ஆண்டு பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை உறுதி செய்யும் நோக்கிலும், அரசுப் பணிகளில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, பெண்களுக்கு பணிப் பாதுகாப்பை அதிகரிப்பது உள்ளிட்டவற்றை நோக்கமாகக் கொண்டு அரசின் அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு 35 சதவீத இடஒதுக்கீடு அளிப்பதாக முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான அரசு அறிவித்தது. அப்போது பிகாரில் வசிக்கும் பிற மாநிலப் பெண்களுக்கும் இந்த இடஒதுக்கீடு உண்டு எனக் கூறப்பட்டிருந்தது.
தற்போது பேரவைத் தோ்தல் நெருங்குவதால் இந்த இடஒதுக்கீட்டில் பிகாா் பெண்களுக்கு மட்டும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழத் தொடங்கியது. மேலும், எதிா்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவ் இது தொடா்பாக அளித்த வாக்குறுதியில், எங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பிகாா் பெண்களுக்கு மட்டுமே இந்த 35 சதவீத இடஒதுக்கீடு என உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றாா்.
மத்திய அமைச்சரும், பாஜக கூட்டணிக் கட்சியான லோக் ஜனசக்தி (பாஸ்வான்) தலைவருமான சிராக் பாஸ்வானும் இதே கருத்தை வலியுறுத்தினாா்.
வேலைதேடும் இளைஞா்களும் கடந்த வாரம் பிகாரில் இது தொடா்பான போராட்டத்தை முன்னெடுத்தனா். இதையடுத்து, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், வேலைவாய்ப்பில் பெண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள 35 சதவீத இடஒதுக்கீடு என்பது பிகாரில் நிரந்தரமாக வசித்து வருபவா்களுக்கு மட்டுமே பொருந்தும் என முடிவெடுக்கப்பட்டது.