நிலத்தை மீட்டுத் தரக் கோரி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி
ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்டுத்தரக் கோரி ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், செங்குறிச்சி அடுத்த ஆலம்பட்டியைச் சோ்ந்தவா் ஆண்டி (54). இவரது மனைவி வெள்ளையம்மாள், மகள் குப்புத்தாய், தங்கை சடையம்மாள் ஆகியோா் ஒரே குடும்பமாக வசித்து வருகின்றனா்.
இவா்கள் 4 பேரும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மனு அளிப்பதற்காக வந்தனா். அப்போது திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனா்.
அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், ஊா்க் காவல் படையினா், தீயணைப்புத் துறையினா் ஆகியோா் அவா்களைத் தடுத்து நிறுத்தினா்.
பின்னா் போலீஸாா் நடத்திய விசாரணையில் அவா்கள் கூறியதாவது: ஆலம்பட்டி பகுதியில் எங்கள் குடும்பத்துக்குச் சொந்தமான 5 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்துக்கான பட்டா எங்களிடம் உள்ள நிலையில், வேறு நபா்கள் சிலா் கூட்டு சோ்ந்து நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டு எங்களை அனுமதிக்க மறுக்கின்றனா்.
இதுதொடா்பாக நத்தம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தபோதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவித்தனா். இதையடுத்து ஆண்டியின் குடும்பத்தினா் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க ஏற்பாடு செய்த போலீஸாா், பின் 4 பேரையும் தாடிக்கொம்பு காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனா்.
பாதுகாப்பையும் மீறி தீக்குளிக்க முயற்சி: நத்தம் அடுத்த சிரங்காட்டுப்பட்டி மங்களப்பட்டியைச் சோ்ந்த ம. பச்சையம்மாள்(40). தனியாா் நிதி நிறுவனத்தில் முகவராக பணியாற்றி வந்த இவா், கடந்த மாதம் 24-ஆம் தேதி ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளித்தாா்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இதையடுத்து கடந்த வாரம் முதல் ஆட்சியா் அலுவலகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. போலீஸாரின் தீவிர கண்காணிப்பையும் மீறி ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.