நீட் தேர்வில் தொடர் தோல்வி: சேலம் மாணவர் தூக்கிட்டு தற்கொலை
நீட் தேர்வு சரியாக எழுதவில்லை என்பதால் சேலம் மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சேலம் நரஜோதிபட்டி ஓம் சக்தி நகரைச் சேர்ந்தவர் ரஞ்சன். டிங்கரிங் பட்டறை வைத்து நடத்தும் இவரின் மனைவி யோகலட்சுமி. இவர் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். இவர்களின் மகன் கௌதம்(20) கடந்த 2023ல் ஜெயின் பால்ஸ் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 முடித்தார்.
கடந்த 2 ஆண்டுகள் நீட் தேர்வில் தோல்வி அடைந்த நிலையில், மூன்றாவது ஆண்டாக கடந்த மாதம் நீட் தேர்வை எழுதினார் கெளதம். இந்தத் தேர்விலும் மதிப்பெண்கள் குறையும் என்ற பயத்தில் இருந்து வந்த அவர் தோல்வி பயம் காரணமாக மனமுடைந்து நேற்று(திங்கள்) மாலை 6.15 மணிக்கு வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீட் தேர்வில் தொடர் தோல்வி காரணமாக மாணவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க | இந்தியாவில் 257 பேருக்கு கரோனா! தமிழகம், கேரளம், மகாராஷ்டிரத்தில் பாதிப்பு!