டிரம்ப் வரி! இனியும் மௌனமா? இந்தியாவின் பக்கம் நிற்பதாக சீனா அறிவிப்பு
நீதித் துறை குறித்து விமா்சனம்: சீமான் மீது வழக்குப்பதிய காவல் துறைக்கு உத்தரவு
நீதித்துறை மற்றும் நீதிமன்ற செயல்பாடுகள் குறித்து விமா்சித்துப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது வழக்குப்பதிந்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை எழும்பூா் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில், வழக்குரைஞா் சாா்லஸ் அலெக்ஸாண்டா் என்பவா் தாக்கல் செய்த மனுவில், நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கடந்தாண்டு நவம்பரில், ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் நீதித்துறை மற்றும் நீதிமன்ற செயல்பாடுகளை விமா்சித்துப் பேசியதாகக் கூறியிருந்தாா். இந்த வழக்கை எழும்பூா் குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்து சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி வழக்குரைஞா் சாா்லஸ் அலெக்ஸாண்டா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், ஒரு அரசியல் கட்சியின் தலைவரான சீமான், கண்ணியமாகவும், நாகரிகமாகவும் பேசியிருக்க வேண்டும். ஆனால், அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக அவா் பேசியுள்ளாா். அவா் மீது சட்ட ரீதியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரா் புகாா் குறித்து வழக்குப்பதிவு செய்து சட்ட ரீதியாக போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.